குளத்தில் இருந்து அத்திவரதரை வெளியே கொண்டுவர பாதை அமைக்கும் பணிகள் தொடக்கம்

அனந்தசரஸ் குளத்திலிருந்து அத்திவரதரை வெளியே கொண்டுவர பாதை அமைக்கும் முதல் கட்டப் பணிகள் தொடங்கியுள்ளன.
அனந்தசரஸ் குளத்தில் தீவிரமாக நடைபெற்று வரும் மணல் மூட்டை அமைக்கும் பணி.
அனந்தசரஸ் குளத்தில் தீவிரமாக நடைபெற்று வரும் மணல் மூட்டை அமைக்கும் பணி.


அனந்தசரஸ் குளத்திலிருந்து அத்திவரதரை வெளியே கொண்டுவர பாதை அமைக்கும் முதல் கட்டப் பணிகள் தொடங்கியுள்ளன.
காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜப் பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் அத்திவரதர் பெருவிழா வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரை 48 நாள்களுக்கு நடைபெறவுள்ளது. இதற்காக, அத்திவரதர் விக்ரகம் இருக்கும் அனந்தசரஸ் குளத்திலிருந்த தண்ணீரும், மீன்களும் பொற்றாமரைக் குளத்துக்கு மாற்றப்பட்டன.
அதன்பிறகு, அந்தக் குளத்தில் சுமார் 3 அடிக்கு சகதி தேங்கியிருந்தது. இதை அகற்றும் பணிகள் கடந்த ஒருவாரத்துக்கும் மேலாக நடைபெற்று வருகின்றன. 
காலை 6.30 மணி முதல் இரவு 8.30 வரை மூன்று பிரிவுகளில் 25 ஊழியர்கள் என மொத்தம் 75 ஊழியர்கள் சுழற்சி முறையில் சகதிகளை வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அத்திவரதர் விக்ரகத்தை வெளியே கொண்டு வருவதற்கான 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. 
6 ஆயிரம் மணல் மூட்டைகள்: இதைத் தொடர்ந்து, அத்திவரதர் இருக்கும் 4 கால் மண்டபத்தைச் சுற்றிலும் தற்போது சகதி வெளியேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, அப்பகுதியில் சுமார் 6 ஆயிரம் மணல் மூட்டைகளை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மணல் மூட்டைகள் அமைக்கப்பட்ட பிறகு, அதன்மீது மணல் தரை அமைக்கப்படும். பின்பு, சிவப்புக் கம்பள விரிப்பு போடப்படும். தொடர்ந்து, ஓரிரு நாள்களில் அத்திவரதரை வெளியே கொண்டுவந்து, ஆஸ்தான சடங்குகள் அனைத்தும் நடத்தப்படவுள்ளன. அதன்பிறகே, ஜூலை 1 ஆம் தேதி முதல் வசந்த மண்டபத்தில் பக்தர்களின் தரிசனத்துக்காக அத்திவரதர் விக்ரகம் வைக்கப்படும்.
யாருக்கும் அனுமதியில்லை: குளத்தில் உள்ள சகதியை வெளியேற்றும் பணிகளை முடித்த பிறகு, அத்திவரதரை வெளியே கொண்டு வரும் பணிகள் நடைபெறும். அப்போது, அங்கு வருவதற்கு அரசு, தனியார் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், ஆன்மிக அமைப்பினர், ஊடகங்கள் என எந்தவொரு தரப்புக்கும் அனுமதியில்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்திவரதர் விக்ரகத்தை வெளியே எடுத்த பிறகு, ஆஸ்தான கோயில் பட்டாச்சரியர்களின் வசம் ஒப்படைக்கப்படும். முறைப்படி அவர்கள் அந்த விக்ரகத்துக்கு சடங்குகள், பூஜைகளை நடத்தி வசந்த மண்டபத்துக்கு ஜூலை 1-ஆம் தேதி பக்தர்களின் தரிசனத்துக்காக கொண்டுவருவர்.
ஆட்சியர் ஆய்வு: இதுதொடர்பாக, வரதர் கோயிலில் ஆட்சியர் பா.பொன்னையா, கோயில் செயல் அலுவலர் தியாகராஜன் உள்ளிட்டோர் செவ்வாய்க்கிழமை காலை ஆய்வு நடத்தினர். அப்போது, அத்திவரதரை எவ்வாறு கொண்டுவருவது? என்னென்ன பணிகள் மேற்கொள்வது?, வஸந்த மண்டபத்துக்கு எவ்வாறு கொண்டுவருவது?, பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com