அத்திவரதர் பெருவிழா: அன்னதானக் குழுவினருக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அறிவுறுத்தல்

அத்திவரதர் பெருவிழாவையொட்டி அன்னதானம் செய்வோருக்கு உணவுப் பாதுகாப்புத்துறை சார்பில் செவ்வாய்க்கிழமை பல்வேறு ஆலோசனகள் வழங்கப்பட்டன.
அத்திவரதர் பெருவிழா: அன்னதானக் குழுவினருக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அறிவுறுத்தல்


அத்திவரதர் பெருவிழாவையொட்டி அன்னதானம் செய்வோருக்கு உணவுப் பாதுகாப்புத்துறை சார்பில் செவ்வாய்க்கிழமை பல்வேறு ஆலோசனகள் வழங்கப்பட்டன.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் 48 நாள்களுக்கு அத்தி வரதர் பெருவிழா நடைபெறவுள்ளது. இதற்காக, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்துக்குள் உள்ள பொதுமக்கள் நல்லுறவு மையத்தில் உணவுப் பாதுகாப்புத்துறை சார்பில் அன்னதானக் குழுவினர், வணிகர்கள் உள்ளிட்டோருக்கான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, உணவுப் பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் அனுராதா தலைமை வகித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். அவர் கூறியதாவது: 
உணவு சமைக்கும், பரிமாறும் இடத்தில் மட்டுமே உணவு தயாரிக்க வேண்டும்; காலை, மதியம், இரவு ஆகிய நேரங்களில் சமைக்கும் உணவு தரமானதாக இருக்க வேண்டும்; நாள்தோறும் சமைக்கும் உணவை சோதனைக்காக 250 கி அளவு பாட்டில்களில் எடுத்து வைக்க வேண்டும்; 
சமைத்த உணவை 5 மணிநேரத்துக்கு மேல் பக்தர்களுக்கு பரிமாறக் கூடாது; 
தடை செய்யப்பட்ட நெகிழியை கட்டாயம் பயன்படுத்தக் கூடாது; மாறாக, வாழை இலை, பாக்கு மட்டை உள்ளிட்ட எளிதில் மக்கும் பொருள்களை பயன்படுத்தலாம்; குறிப்பாக, காலாவதியான உணவுப் பொருள்களை பயன்படுத்தக் கூடாது; உணவு பரிமாறும்போது உரிய பாதுகாப்புக் கவசங்களை அணிந்து கொண்டு, தூய்மையான முறையில் பரிமாற வேண்டும்; 
உணவுக் கழிவுகளை குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே போட வேண்டும்; கட்டாயம் சுகாதார விஷயத்தில் அனைவரும் உரிய விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்; இதை மீறும் பட்சத்தில் உணவுப் பாதுகாப்புத்துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என்றார் அவர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், காஞ்சிபுரம், வாலாஜாபாத் வட்டங்களைச் சேர்ந்த உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள், வரதராஜப் பெருமாள் கோயிலையொட்டி உள்ள மளிகைக் கடை வியாபாரிகள், உணவக உரிமையாளர்கள், அன்னதானக் குழுவினர் என திரளானோர் கலந்துகொண்டனர்.
22 குழுவினருக்கு அன்னதான அனுமதி
அலுவலர் அனுராதா கூறுகையில், அத்திவரதர் பெருவிழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் செய்ய சார் ஆட்சியர் அலுலகத்தில் பதிவு செய்து உணவுப் பாதுகாப்பு துறை மூலம் அனுமதி பெறவேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியிலிருந்து 3 குழுவினர், காஞ்சி சங்கர மடம் உள்பட மொத்தம் 22 குழுவினருக்கு அன்னதானம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
முதல் 2 நாள்கள் உள்ளூர் விடுமுறை அளிக்க எம்எல்ஏ கோரிக்கை
அத்திவரதர் பெருவிழாவையொட்டி கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் ஆட்சியர் பா.பொன்னையாவிடம் மனு அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: 
அத்திவரதரை தரிசிக்க நேரம் ஒதுக்கி அளித்தது, மாணவர்களுக்கு பள்ளி நேரத்தை மாற்றியமைத்துத் தந்ததற்கு நன்றி. அத்திவரதர் பெருவிழா நடைபெறவுள்ள 48 நாள்களில் 7 சனிக்கிழமைகளும் உள்ளூர் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். அதேபோல், ஜூலை 1, 2 ஆகிய இரண்டு நாள்கள் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும். அரக்கோணம்-செங்கல்பட்டு மற்றும் மறு மார்க்கத்திலிருந்து சிறப்பு மின் தொடர் ரயிலை நாள்தோறும் ஒவ்வொரு மணி நேரத்துக்கு ஒருமுறை இயக்க வேண்டும். உள்ளூர் கார்களுக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மூலம் விண்ணப்பித்து அனுமதிச் சீட்டு பெற ஆவன செய்ய வேண்டும். 
தெருவோர, சாலையோர சிற்றுண்டிக் கடைகளை ஏழை எளியோரின் வாழ்வாதாரத்துக்கு ஏற்ப உணவின் தரத்தை உறுதி செய்து குறைந்த இடங்களில் வியாபாரம் செய்ய வழிவகை செய்ய வேண்டும் என அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
4 சக்கர வாகனங்களுக்கு அனுமதிச் சீட்டு பெற ஏற்பாடு
அத்திவரதர் பெருவிழாவையொட்டி உள்ளூர்வாசிகளில் 4 சக்கர வாகனங்கள் வைத்திருப்போர் உதவி மையத்தை அணுகி அனுமதிச் சீட்டை பெற்றுக்கொள்ளலாம் என ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்துள்ளார்.
வரதராஜப் பெருமாள் கோயிலில் அத்திவரதர் பெருவிழா ஜூலை 1-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, காஞ்சிபுரம் பெருநகராட்சிக்குட்பட்ட 4 சக்கர வாகனங்களுக்கு அனுமதிச் சீட்டு வழங்கப்படவுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக  காவல் அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தில் நேரில் சென்று இதைப் பெற்றுக்கொள்ளலாம். 
அதன்படி, புதன்கிழமை (ஜூன் 26) காலை 10 மணி முதல் வரும் 30-ஆம் தேதி நண்பகல் 1 மணி வரை இந்த அனுமதிச் சீட்டு வழங்கப்படும். அனுமதிச் சீட்டு பெறச் செல்வோர் உள்ளூர் முகவரிக்கான ஆதார் அட்டை, வாகனத்துக்கான உரிமச் சான்று, காப்பீட்டுச் சான்று ஆகியவற்றை கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும். நான்கு சக்கர வாகனங்களை நேரில் கொண்டு செல்லத் தேவையில்லை. இதர ஆவணங்களும் தேவையில்லை என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com