வியாழக்கிழமை 22 ஆகஸ்ட் 2019

அத்திவரதர் பெருவிழாவுக்கு ரூ.13 கோடி செலவில் சிறப்புப் பணிகள்: 3 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள்

DIN | Published: 12th June 2019 04:33 AM


அத்திவரதர் பெருவிழாவுக்கு ரூ.13 கோடி செலவில் சிறப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் 3 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜப் பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் பெருவிழா ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதையொட்டி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தலைமையில் காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு, அறநிலையத் துறை  முதன்மைச் செயலர் கே.பனீந்திர ரெட்டி, ஆட்சியர் பா.பொன்னையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, அமைச்சர், வரதராஜப் பெருமாள் கோயிலில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆய்வில், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி, மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதன் பின், வரதர் கோயிலுக்கு நேரில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் சென்று, அங்கு நடைபெற்று வரும் பணிகள் குறித்துக் கேட்டறிந்தார். இதையடுத்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
வரும் ஜூலை 1-ஆம் தேதி ஆதி அத்திகிரி வரதர் விக்ரகம் அனந்த சரஸ் குளத்திலிருந்து பக்தர்கள் தரிசனத்துக்கு கொண்டுவரப்படவுள்ளது. இதையொட்டி, பக்தர்கள் தரிசனம் செய்யவும், ஆராதனை செய்யவும் அறநிலையத் துறை, மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வரதர் கோயிலில் ஆதி அத்திகிரி வரதரை திரு ஆராதனை செய்ய வரும் பக்தர்கள் சிரமமுமின்றி வழிபாடு செய்வதற்காக, கிழக்கு ராஜகோபுரம் முதல் தேசிகர் சந்நிதி வழியாக பொது தரிசனம் செய்ய தனிவழிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், கிழக்கு ராஜகோபுரம் முதல் தேசிகர் சந்நிதி, வசந்த மண்டபம் வழியாக சிறப்பு தரிசன தனிவழி அமைக்கப்படவுள்ளது. சிறப்பு தரிசனத்துக்கு கட்டணமாக ரூ.50 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தரிசன நேரம்: வரதராஜர், தாயார் சந்நிதிகளுக்குச் செல்லும் வழிக்காக மேற்கு ராஜகோபுரத்திலிருந்து தனியாக ஒரு வரிசை ஏற்படுத்தி  மூலவர், தாயாரை  தடையின்றி தரிசனம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஜூலை 1-ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரை  நடைபெறும் திரு ஆராதனை நிகழ்வில் முதல் 24 நாள்களுக்கு சயனக் கோலத்திலும், அடுத்த 24 நாள்களுக்கு  நின்ற கோலத்திலும் அத்திவரதர் காட்சியளிக்கவுள்ளார்.
அத்திவரதர் விழாவுக்கென, காஞ்சிபுரம் நகராட்சி மூலம் ரூ.4.37 கோடி, மின்வாரியம் மூலம் ரூ.92.37 லட்சம், நெடுஞ்சாலைத் துறை மூலம் ரூ.4.97 கோடி, அறநிலையத் துறை மற்றும் உபயதாரர்கள் மூலம் ரூ.2.52 கோடி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ரூ.10 லட்சம் என மொத்தம் ரூ.12.89 கோடி செலவில் பணிகள் தொடங்கப்படவுள்ளன. 
தற்காலிக பேருந்து நிலையம்: காஞ்சிபுரம் நகரத்தில்  தற்காலிக பேருந்து நிலையமாக ஓரிக்கை, ஒலிமுகமதுபேட்டை, பச்சையப்பன் கல்லூரி வளாகம் ஆகிய மூன்று இடங்களில்  அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பக்தர்கள் எளிதில் கோயிலுக்கு வந்து செல்ல தற்காலிக வாகன நிறுத்தும் இடத்திலிருந்து கோயில் அருகில் வருவதற்கு 10 பேருந்துகள் வீதம் 10 நிமிடத்துக்கு ஒருமுறை இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
சுகாதார வசதிகள்: காஞ்சிபுரம் நகராட்சி பகுதியில் 70 கழிப்பிடங்கள் பயன்பாட்டில் உள்ளன. கோயிலைச் சுற்றியுள்ள 4 மாட வீதிகளிலும் ஆண், பெண் இரு பாலருக்கும் தலா 11 வீதம் 22 தற்காலிகக் கழிப்பிடங்களை கூடுதலாக அமைக்கவும், சின்ன காஞ்சிபுரம் பகுதியில் 36, பெரிய காஞ்சிபுரம் பகுதியில் 92 கழிப்பிட ங்களை அமைக்கவும் ஏற்பாடு செய்யப்படவுள்ளது. தற்காலிக பேருந்து மற்றும் வாகன நிறுத்துமிடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுகாதாரத் துறை மூலமாக வாகன மண்டபம், திருமங்கையாழ்வார் சந்நிதி, மேற்கு மாடவீதி, வாலாஜாபாத் நுழைவு போன்ற தற்காலிக பேருந்து நிறுத்தங்களில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கவும் முக்கிய பகுதிகளில்  108 ஆம்புலன்ஸ் வாகனத்துடன் கூடிய தற்காலிக மருத்துவ அறைகளை அமைத்து 24 மணி நேரமும் அனைத்து மருத்துவர்களும் பணியாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகள்: பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் நோக்கில் கோயில் அருகே காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கவும், நகரைச் சுற்றியுள்ள முக்கிய பகுதிகளில் சிசிடிவி கேமராக்களை அமைத்து கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூடுதல் பாதுகாப்புப் பணிக்காக ஊர்க்காவல் படையினர், என்எஸ்எஸ், என்சிசி மாணவர்களைப் பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.

 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

அத்திவரதர் பெருவிழா: மருத்துவ முகாம்களில் 1.39 லட்சம் பேருக்கு இலவச சிகிச்சை: சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்
கிருஷ்ணர் பொம்மைகள் செய்யும் பணி தீவிரம்
நீர் நிலைகளைப் பாதுகாக்க அதிகாரிகள் குழு ஆய்வு
அத்திவரதர் பெருவிழா: உண்டியல் காணிக்கை ரூ.10.60 கோடி
இளைஞர் வெட்டிக் கொலை