காஞ்சிபுரம்

ஆக. 7, 9-ல் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி

31st Jul 2019 04:19 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே படைப்பாற்றலையும், பேச்சாற்றலையும் வளர்க்கும் நோக்கில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாவட்ட அளவிலான பல்வேறு போட்டிகள் வரும் ஆகஸ்ட் 7 மற்றும்  9-ஆம்  தேதிகளில் நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:   காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும்  மற்றும் தனியார் மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ் 1,  பிளஸ் 2 வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கான போட்டிகள் ஆகஸ்ட் 7-ஆம் தேதி பெரிய காஞ்சிபுரம் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.  அதேபோல அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கலைக் கல்லூரிகள், பொறியியல், மருத்துவம், பல்தொழில் நுட்பம், கல்வியியல், ஆசிரியர் பயிற்சி, செவிலியர் பயிற்சி, வேளாண்மை தொழிற்பயிற்சி கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான போட்டிகள் ஆகஸ்ட் 9-ஆம் தேதிகளில் சின்ன காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் நடைபெற உள்ளது.
ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் போட்டிக்கு ஒருவர் வீதம் மூன்று மாணவர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். அவர்களை பள்ளி தலைமையாசிரியரே தேர்வு செய்து அனுப்ப வேண்டும். ஒரு கல்லூரியிலிருந்து ஒரு போட்டிக்கு ஒரு மாணவர் வீதம் மூன்று மாணவர்களைத் துறைத் தலைவர் தேர்வு செய்து, போட்டியில் கலந்து கொள்வதற்குரிய படிவத்தை பூர்த்தி செய்து, கல்லூரி முதல்வரின் ஒப்புதல் பெற்று அனுப்ப வேண்டும். இதற்கு முந்தைய ஆண்டுகளில் ஒரே போட்டியில் இரண்டு முறை பரிசு பெற்றவர்கள் அதே போட்டியில் கலந்து கொள்ள அனுமதியில்லை.
போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10, 000, இரண்டாம் பரிசாக ரூ.7000, மூன்றாம் பரிசாக ரூ.5000 வழங்கப்படும். ஆர்வமுள்ள மாணவர்கள் கலந்து கொண்டு பயனடையலாம்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT