மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் திங்கள்கிழமை மின்கம்பத்தில் கார் மோதி எரிந்ததில் ஒருவர் உயிரிழந்தார். 3 பெண்கள் உள்பட 7 பேர் பலத்த காயமடைந்தனர்.
மாமல்லபுரத்தில் இருந்து திங்கள்கிழமை சென்னையை நோக்கிச் சென்ற கார் ஒன்று, தேவனேரி புலிக்குகை அருகே சென்றபோது, முன்னால் சென்ற ஷேர் ஆட்டோ மீது மோதாமல் இருக்க காரை திருப்பியதில், கார் நிலை தடுமாறி சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதியது.
இதில் மின்கம்பம் உடைந்து மின்சாரம் பாய்ந்ததில் கார் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. தகவலறிந்த திருக்கழுகுன்றம் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயைஅணைத்தனர்.
இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த முனுசாமி மகன் சந்திரசேகர் (26) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் காரில் பயணம் செய்த 3 பெண்கள் உள்பட 7 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் பூஞ்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து மாமல்லபுரம் காவல் ஆய்வாளர் ரவிக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.