பிடாரி செல்லியம்மன் கோயில் தேரோட்டம்

அழிசூர் கிராமத்தில் உள்ள பிடாரி செல்லியம்மன் கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி செவ்வாய்க்கிழமை தேரோட்ட விழா விமரிசையாக நடைபெற்றது.
பிடாரி செல்லியம்மன் கோயில் தேரோட்டம்


அழிசூர் கிராமத்தில் உள்ள பிடாரி செல்லியம்மன் கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி செவ்வாய்க்கிழமை தேரோட்ட விழா விமரிசையாக நடைபெற்றது.
உத்தரமேரூரை அடுத்த அழிசூர் கிராமத்தில் தொன்மை வாய்ந்த இக்கோயில் உள்ளது. கிராம மக்கள் பிடாரி செல்லியம்மனை காவல் தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இக்கோயிலின் பிரம்மோற்சவம் கடந்த 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, அம்மனுக்கு நாள்தோறும் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடத்தப்பட்டு வந்தது. காப்புக் கட்டிய நாள் முதல் தினந்தோறும் இரவு வேளையில் அம்மன் வீதியுலா நடைபெற்று வருகிறது. இதில் அம்மன் பைரவி, சிவசக்தி, காயத்திரி, காளி, மகிஷாசுரமர்த்தினி என பல்வேறு கோலங்களில் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். 
இந்நிலையில், விழாவின் நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை, விரதமிருந்த பெண்கள் கோயில் வளாகத்தில் ஊரணிப் பொங்கலிட்டனர். அவர்கள் வேப்பிலை ஆடை அணிந்து நேர்த்திக் கடனை நிறைவேற்றினர். பின்பு, பிடாரி செல்லியம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.  அதைத் தொடர்ந்து, மலர்கள், மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது பக்தர்கள் தீபாராதனை காட்டியும், தேங்காய் உடைத்தும் அம்மனை வழிபட்டனர். கிராமம் முழுவதும் தேரில் ஊர்வலம் வந்த அம்மன் இரவு கோயிலை வந்தடைந்தார். அதன் பின் கோயில் வளாகத்தில் கட்டைக்கூத்து நிகழ்ச்சிநடைபெற்றது.
பிரம்மோற்சத்தையொட்டி நாள்தோறும்  பக்தர்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டதுடன், நீர் மோர் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர், கிராமத்தினர் செய்திருந்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com