அத்திவரதரை தரிசிக்க கூடுதல் ஏற்பாடுகள்: ஆட்சியர் தகவல் 

அத்திவரதரைத் தரிசனம் செய்ய வரும் நாள்களில் கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்துள்ளார்
அத்திவரதரை தரிசிக்க கூடுதல் ஏற்பாடுகள்: ஆட்சியர் தகவல் 

அத்திவரதரைத் தரிசனம் செய்ய வரும் நாள்களில் கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியதாவது:
 கடந்த 14 நாள்களில் அத்திவரதரை லட்சக்கணக்கானோர் தரிசனம் செய்துள்ளனர். பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை எவ்வித அசம்பாவிதமும் இன்றி விழா சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விழா முடியும் வரை எவ்வித சிரமமுமின்றி பக்தர்கள் தரிசனம் செய்ய ஒவ்வொறு நாள் இரவும் காவல்துறை, அறநிலையத் துறை, மாவட்ட நிர்வாக அதிகாரிகள் சேர்ந்து பக்தர்களின் அசௌகரியங்கள், வசதிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
 அதன்பிறகு, அடுத்த நாளுக்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. சனிக்கிழமை மட்டும் 2.5 லட்சம் பேர் தரிசனம் செய்தனர். அவர்களில் 70 ஆயிரம் பேர் முதியோர்கள். எனவே, முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், தாய்மார்களுக்கு என்று தனிவரிசை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதிக கூட்டம் வந்ததால் சனிக்கிழமை அனைத்து வரிசைகளிலும் பக்தர்கள் அனுப்பப்பட்டனர். வரும் நாள்களில் இதுபோன்று நிகழாமல் முதியோர்கள் உள்ளிட்டோருக்கு எப்போதும் தனிவரிசை அமைக்கப்படும். அதோடு, ஆன்லைன் மூலம் முதியோர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு வசதி ஏற்படுத்தி தரிசனம் செய்துவிக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
 தரிசன நேரம் ஒரு மணி நேரம் குறைப்பு: கூட்டம் அதிகமாக வரும் நாள்களில் மட்டும் நெரிசலுக்கு ஏற்பட சில மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும். இதர நாள்களில் வழக்கமான தரிசன நேரமான அதிகாலை 5 மணிமுதல் 10 மணிவரை தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வந்தது. சில முன்னேற்பாட்டுப் பணிகளுக்கென தரிசன நேரத்தை இரவு 1 மணிநேரம் குறைத்து 9 மணிவரை அனுமதிக்கப்படுவர். இதைத் தவிர தரிசன நேரத்தில் மாற்றம் இல்லை.
 இரவு நேரம் முழுவதும் தரிசிக்கும் வகையில் மாற்ற இயலாது. இதற்கு காரணம், அதிகாலை முதல் இரவு வரை பக்தர்கள் வருகை தருவதால் தெருக்கள், சாலைகளில் குப்பைகள் அதிகமாக சேர்ந்து விடுகின்றன. குப்பைகளை பெருநகராட்சி ஊழியர்கள் முழுவதுமாக அகற்ற வேண்டியுள்ளது.
 குடிநீர்த் தொட்டிகளுக்கு நீரேற்றுவது உள்பட பல பணிகள் செய்யப்படுகின்றன. இதற்கு இடைப்பட்ட நேரத்தில் மட்டுமே இப்பணியை சிறப்பாக செய்ய முடியும். அதேபோல், பட்டாச்சாரியார்களுக்கு சம்பிரதாயங்களை குறிப்பிட்ட நேரத்துக்குள முடித்துவிட்டு மீண்டும் அதிகாலை அவர்கள் வரவேண்டும்.
 எனவே, பொது தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் குறைந்தது 3-4 மணிநேரமாவது வரிசையில் சென்றுதான் தரிசிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டோடு வரவேண்டும். அதுபோல், குறிப்பிட்ட தற்காலிக பேருந்து நிலையங்கள், வாகனநிறுத்தங்களில் தனது காலணிகளை விட்டு விட்டு வரவேண்டும். காலணிகளை பராமரிக்க சில ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதை, விரைவில் செயல்படுத்த உள்ளோம்.
 மேலும் சிற்றுந்துகள் வரவழைப்பு: ரயில் நிலையங்களிலிருந்து வரும் பக்தர்களை வரதர் கோயிலுக்கு அழைத்து வருவதற்கும், தற்காலிகப் பேருந்து நிலையங்களிலிருந்து வருவதற்கும் கூடுதலாக 10 சிற்றுந்துகள் வரவழைக்கப்பட உள்ளன. அதே போல், 8 இருசக்கர அவசர ஊர்திகள், 10 ஆம்புலன்ஸ் வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. மேலும் 2 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட உள்ளன.
 தற்போது கிழக்கு கோபுர நுழைவுப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பந்தலுக்கு அருகே 10 கழிப்பறைகளும், வெளிப்பகுதிகளில் கூடுதலாக 35 கழிப்பறைகளும் அமைக்கப்படும். வரிசையில் செல்லும் பக்தர்களுக்கு குடிநீர் வழங்க அதிக தன்னார்வலர்கள் பயன்படுத்தப்படுவர். பக்தர்கள் இளைப்பாற 250க்கு 50 சதுர அடியில் பந்தல் அமைக்க ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
 தெற்கு மாட வீதியிலிருந்து பக்தர்கள் வெயில், மழையில் பாதிக்கப்படாதவாறு பந்தல் அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால், செவ்வாய்க்கிழமைக்குள் பந்தல் பயன்பாட்டுக்கு வந்துவிடும். முக்கியஸ்தர்களுக்கான வரிசையும் தற்போது முறைப்படுத்தப்பட்டுள்ளது. அனுமதிச் சீட்டு இல்லாமல் யாரையும் அந்த வரிசையில் அனுமதிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 ஏற்கெனவே, முன்னேற்பாட்டுப் பணிகளுக்கு ரூ.29 கோடி செலவிடப்பட்டது. மேலும் கூடுதல் நிதி எதுவும் கோரவில்லை. உபயதாரர்களின் உதவியோடு சில பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே, பக்தர்கள் சிரமமின்றி வரும் நாள்களில் தரிசனம் செய்யலாம் என்றார் அவர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com