அச்சிறுப்பாக்கம் சித்தேரியை தூர்வாரக் கோரிக்கை

மதுராந்தகத்தை அடுத்த அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி அலுவலகத்தின் முன் அமைந்துள்ள சித்தேரி ஏரியைத் தூர்வாரி சீரமைக்குமாறு அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.

மதுராந்தகத்தை அடுத்த அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி அலுவலகத்தின் முன் அமைந்துள்ள சித்தேரி ஏரியைத் தூர்வாரி சீரமைக்குமாறு அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.
 அச்சிறுப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியாக, சித்தேரி ஏரி உள்ளது. நகர கிராம நிர்வாக அலுவலக பதிவேடுகளின்படி 22.360 பரப்பளவு கொண்டதாகும். சுமார் 100 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசனம் அளிக்க கூடிய வகையில் இந்த ஏரி நீர் பயன்பட்டு வந்தது. தற்சமயம் ஏரி முழுவதும் முட்செடிகள் மற்றும் வளர்ந்தோங்கிய மரங்களுடன் வனப்பகுதி போல் காட்சியளிக்கிறது.
 மழைக் காலங்களில் அச்சிறுப்பாக்கம் மலைப்பகுதியில் இருந்தும், சுற்றுப்புறப் பகுதிகளில் இருந்தும் வெளியேறும் மழை வெள்ளநீர் சித்தேரி ஏரியில் தேங்குகிறது. கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேல் இந்த ஏரி தூர்வாரப்படாமல் உள்ளதால், போதுமான நீர் தங்காமல் கால்வாய்களின் மூலம் வெளியேறி, வி.எம்.நகர் வழியாக தேன்பாக்கம் ஏரியை வந்தடைகிறது.
 இந்த ஏரியில் ஆக்கிரமிப்பு மட்டுமின்றி, பஜார் வீதி வியாபாரிகள் குப்பைகளைக் கொட்டும் இடமாகவும் இருக்கிறது. முட்செடிகளும், செடி கொடிகளும் அதிகமாக இருப்பதால் அதிக அளவில் பாம்பு போன்ற விஷபூச்சிகள் இரவு நேரத்தில் அருகில் உள்ள வீடுகளுக்கும், கடைகளுக்கும் வந்து விடுகின்றன. இதனால் இப்பகுதி மக்கள் அச்சத்துடன் இருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
 ஏரிப்பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் சிறுகுட்டை போல் தேங்கியுள்ளதால் அதில் ஏராளமான கொசுக்கள் உருவாகி பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுபற்றி இப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கூறியது:
 மதுராந்தகம் வருவாய்த் துறையினரும், அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளும் ஒருங்கிணைந்து கிராம நிர்வாக அலுவலக பதிவேட்டின்படி சித்தேரி ஏரியை முழுமையாகத் தூர் வார நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளையும், அங்கு கொட்டப்படும் குப்பைளையும் அகற்ற வேண்டும். அப்போது தான் ஏரியில் போதுமான நீரைத் தேக்க முடிவதோடு, இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டமும் உயரும்.
 இப்பணியை மாவட்ட நிர்வாகத்தின் மேற்பார்வையில் செய்தால் சித்தேரி ஏரி புத்துயிர் பெறும். மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து கண்டுகொள்ளாவிட்டால் ஏரியின் அனைத்துப் பகுதிகளும் ஆக்கிரமிக்கப்பட்டு வீட்டு மனைகளாக்கப்படும். எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சித்தேரி ஏரியைத் தூர்வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com