மதுராந்தகம் சௌபாக்மல் சௌகார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து முடித்த மாணவியருக்கு மடிக் கணினி வழங்காத தலைமை ஆசிரியையைக் கண்டித்து மாணவியர்திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்பள்ளியில் சுமார் 3ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவியர் படித்து வருகின்றனர். இங்கு கடந்த 2017-18 -ஆம் ஆண்டில் பிளஸ் 2 படித்து முடித்த மாணவியருக்கு இதுவரை மடிக் கணினி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், 2019-20 -ஆம் நிதியாண்டில் பிளஸ் 2 படிக்கும் மாணவியருக்கு மட்டும் தற்சமயம் மடிக் கணினி
வழங்க, தலைமை ஆசிரியை விஜயகுமாரி ஏற்பாடு செய்து வந்தாராம். தகவல் அறிந்த முன்னாள் மாணவியர் இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது, தகாத வார்த்தைகளை கூறினார்களாம். இதனால் ஆத்திரமடைந்த 20-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவியர் மதுராந்தகம் பேருந்துநிலையம் அருகில் அரசுப் பேருந்தை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த மதுராந்தகம் போலீஸார் மாணவியரிடம் பேச்சு வார்த்தை நடத்தி, பின்னர் அவர்களை பள்ளி தலைமை ஆசிரியையிடம் அழைத்துச் சென்று சமாதானப்படுத்தினர்.