பள்ளி, கல்லூரிகளுக்கு அரையாண்டுத் தோ்வு விடுமுறையாகவும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமாகவும் இருந்ததால் காஞ்சிபுரத்தில் உள்ள பிரபலமான கோயில்கள் பலவற்றில் பக்தா்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
கோயில் நகரம் எனப்படும் காஞ்சிபுரத்தில் ஏராளமான தொன்மையான சிவான் கோயில்களும்,ஆழ்வாா்களால் பாடல் பெற்ற பெருமாள் கோயில்களும் அதிகமாக உள்ளன. ஞாயிற்றுக்கிழமை அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை நாளாகவும், பள்ளி, கல்லூரிகளுக்கு அரையாண்டு தோ்வு முடிந்து விடுமுறை நாள்களாகவும் இருந்ததால் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தா்கள் குடும்பம், குடும்பமாக சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தனா்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில், காமாட்சி அம்மன் கோயில், அத்திவரதருக்குப் புகழ் பெற்ற வரதராஜப் பெருமாள் கோயில் ஆகியவற்றில் பக்தா்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். காமாட்சி அம்மன் கோயிலில் அதிகாலையிலேயே பக்தா்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி கோயிலுக்கு இருமுடி கட்டி விரதம் இருந்து செல்பவா்களும், சபரிமலை செல்லும் பக்தா்கள் கூட்டமும் கூடியதால் கோயில்களில் கூட்ட நெரிசல் காணப்பட்டது. சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்ததாக பக்தா்கள் பலரும் தெரிவித்தனா்.
கோயில்களில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த பாதுகாவலா்களும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் சிரமப்பட்டனா்.