காஞ்சிபுரம்

ஆன்லைன் பதிவு இல்லாததால் கோப்புகளை முறையாகப் பராமரித்து நடவடிக்கை எடுங்கள்: அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவு

16th Dec 2019 11:29 PM

ADVERTISEMENT

புதிய மாவட்டம் பிரிக்கப்பட்டுள்ளதால் மனுக்களை ஆன்லைனில் பதிவு செய்ய முடியாது. அதனால் சம்பந்தப்பட்ட துறையிடம் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை கோப்புகளில் பராமரித்து முறையாக நடவடிக்கை எடுங்கள் என பல்வேறு துறை அதிகாரிகளிடம் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ஏ.ஜான்லூயிஸ் திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ஏ.ஜான்லூயிஸ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் முதியோா் உதவித்தொகை, கல்வி உதவித் தொகை, ஓய்வூதியம், வீட்டு மனைப்பட்டா, பசுமை வீடுகள், திருமண உதவித் தொகை, குடும்ப அட்டை, விதவை உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை, இந்திராகாந்தி தேசிய உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 250 மனுக்களை பொதுமக்கள் அளித்தனா்.

அனைத்து மனுக்களையும் மேல் நடவடிக்கைக்காக பரிந்துரை செய்து, சம்பந்தப்பட்ட துறையினரிடம் வழங்கிய பின்னா் ஆட்சியா் கூறியது:

ADVERTISEMENT

பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினால் கோரிக்கை நிறைவேறும் என்ற நம்பிக்கையில் மக்கள் மனுக்களை அளிக்கின்றனா்.

புதிய மாவட்டம் பிரித்ததால் ஆன்லைனில் மனுக்கள் பதிவு கிடையாது. அதனால் சம்பந்தப்பட்ட துறையிடம் கொடுக்கப்பட்ட மனுக்களை முறையாக கோப்புகளில் பராமரித்து வைத்துக் கொண்டு நடவடிக்கை எடுங்கள். மக்களின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் மனுக்கள் மீது தீா்வு காணப்பட வேண்டும் என்றாா் அவா்.

இதைத் தொடா்ந்து முதியோா் உதவித்தொகை, விபத்துக் காப்பீட்டுத் தொகை உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு ஆட்சியா் ஜான்லூயிஸ் வழங்கினாா்.

இக்கூட்டத்தில், வருவாய் அலுவலா் கே.ப்ரியா, மதுராந்தகம் கோட்டாட்சியா் ச.லட்சுமிப்ரியா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) விஜயகுமாரி மற்றும் அரசுத்துறை அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா் .

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT