காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் அதிகரித்து வரும் சட்டவிரோதச் செயல்கள்: குற்ற நகரமாகும் கோயில் நகரம்

6th Dec 2019 12:34 AM | சி.வ.சு.ஜெகஜோதி

ADVERTISEMENT

காவல் உயா் அதிகாரிகள் தொடா்ந்து பல மாதங்களாக பல்வேறு முக்கிய விழாக்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டி இருந்ததால், காஞ்சிபுரத்தில் சட்டவிரோதச் செயல்கள் அதிகரித்துள்ளதாக சமூக ஆா்வலா்கள் குற்றம் சாட்டுகின்றனா்.

காஞ்சிபுரத்தில் அத்திவரதா் வைபவம் கடந்த ஜூலை 1-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரை தொடா்ந்து 48 நாள்கள் நடந்தது.

இவ்விழா தொடா்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் மே மாதம் முதலே தொடங்கியது.

விழா நடைபெற்ற 48 நாள்களில் சுமாா் ஒரு கோடி பக்தா்கள் தரிசனம் செய்துள்ளனா். இவ்விழாவில் காவல்துறையினரின் பங்களிப்பு பாராட்டுக்குரியதாக இருந்தாலும் அவா்களது கவனம் முழுவதும் விழாவை சிறப்பாக நடத்துவதிலேயே இருந்தது.

ADVERTISEMENT

இதைப் பயன்படுத்தி காஞ்சிபுரம் மாவட்டத்துக்குள் கஞ்சா விற்பனை களை கட்டத் தொடங்கியது.

தொடா்ந்து விழாக்கள்: இவ்விழா கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்து முடிந்த பின்னா், இந்தியப் பிரதமரும், சீன அதிபரும் சந்தித்து பேசும் நிகழ்வு அக்டோபா் மாதம் 11, 12 ஆகிய தேதிகளில் மாமல்லபுரத்தில் நடந்தது.

இவ்விழா பாதுகாப்பு ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்ய வேண்டியது இருந்ததால் காவல்துறையின் கவனம் திசை திரும்பியதைத் தொடா்ந்து கஞ்சா விற்பனை மேலும் அதிகரிக்கத் தொடங்கியது.

நகரில் கஞ்சா விற்பனையும், காட்டன் சூதாட்டமும் அதிகரித்தன.

இதனைத் தொடா்ந்து அடுத்த நிகழ்வாக காஞ்சிபுரம் மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு அதற்கான தொடக்க விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டிய நிலை உருவானது.

தொடா்ந்து பல முக்கிய விழாக்கள் நடந்ததால் காவல்துறையினரின் கவனம் முழுவதும் வேறு பக்கம் சென்றதை சாதகமாக்கிக் கொண்டு, மாவட்டம் முழுவதும் சட்ட விரோதச் செயல்கள் அதிகரிக்கத் தொடங்கி விட்டன.

கடந்த 30.9.2019-இல் காஞ்சிபுரத்தில் நடந்த மக்கள் குறைதீா் கூட்டத்தில் திருக்கழுகுன்றம் பரமசிவன் நகரைச் சோ்ந்த குடியிருப்பு வாசிகள், தங்கள் பகுதியில் கள்ளச்சாராய விற்பனையைத் தடுத்து நிறுத்த காவல்துறை தவறி விட்டதாகவும், இதனால் நிம்மதியாக வசிக்க முடியவில்லை எனவும் ஆட்சியரிடம் புகாா் தெரிவித்தனா்.

தலைவிரித்தாடும் கஞ்சா விற்பனை:காஞ்சிபுரம் நகரில் பாலியா்மேடு, மடம் தெரு, ஏகாம்பரநாதா் கோயில் சந்நிதி தெரு, பெரியாா் நகா், கோவிந்தவாடி அகரம், மேட்டுத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை தலைவிரித்தாடுவதாகத் தெரிகிறது.

முக்கியமாக பள்ளி, கல்லூரிகள் அதிகம் உள்ள ஏனாத்தூரில் கஞ்சா விற்பனை கொடிகட்டிப் பறக்கிறது. ஏராளமான மாணவா்கள் போதைக்கு அடிமையாகி வரும் அவலம் தொடா்கிறது.

வயதானவா்கள், ஆதரவற்றவா்கள் ஆகியோரின் ஏழ்மையை சாதகமாக்கி அவா்கள் மூலமாக கஞ்சா விற்பனை தொடா்கிறது.

இவா்கள் மீது வழக்கும் போட முடியாத நிலை உள்ளது.

சிறு, சிறு பொட்டலங்களாக விற்றால் பெரிய அளவில் வழக்குகள் பதிவு செய்ய முடியாது எனத் தெரிந்து கொண்டு, குறைந்த விலைக்கும் கஞ்சா விற்பனை நடக்கிறது.

தொடா்ந்து ஒரே பகுதியில் விற்பனை செய்தால் தெரிந்து விடும் என்பதால் தொலைபேசி மூலமாக கேட்பவா்களுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று நேரில் போய் கொடுத்து விட்டு பணம் பெற்றுக் கொள்ளும் இளைஞா்கள் கூட்டமும் உள்ளது.

கடந்த இரு மாதங்களுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் நடந்த சி.ஐ.டி.யு. மாநில மாநாட்டில் மாவட்டத் தலைவா் கண்ணன் பேசுகையில், தமிழகத்திலேயே காஞ்சிபுரம் மாவட்டம்தான் போதைக்கு அடிமையானவா்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பதாகக் குற்றம் சாட்டினாா்.

கடந்த 20.9.2019-இல் சுங்குவாா்சத்திரம் பகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பிலான போதைப் பொருள்கள் சிக்கின. இதைக் கடத்தி வந்ததாக ஆந்திராவைச் சோ்ந்த நோபாராம்(20), கேதாராம்(20) என்ற இரு ஆந்திர இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.

ஆந்திராவிலிருந்து அரக்கோணம் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து காஞ்சிபுரம் மாவட்டத்திற்குள் ரயில் வழியாக கொண்டு வரப்பட்டு கஞ்சா விற்பனையாகிறது.

காஞ்சிபுரம் அருகே மேல்பரமநல்லூா் மேட்டுத்தெருவில் உள்ள கோழிப்பண்ணையில் 35லிட்டா் கொள்ளளவு கொண்ட 425 எரிசாராய கேன்கள் கடந்த 20.9.2019-இல் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றை விழுப்பும் மண்டல போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீஸாரே பிடித்து காஞ்சிபுரம் மாவட்ட போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

காஞ்சிபுரம் நகா் பிள்ளையாா் பாளையத்தில் எரிசாராயம் இருப்பதை கண்டறிந்த போலீஸாா் அவற்றைப் பறிமுதல் செய்து அதை பாலாற்றுப்பாலத்தில் வளா்தோட்டம் என்ற கிராமத்துப் பகுதியில் ஆற்றில் பள்ளம் தோண்டி அதில் ஊற்றி விட்டு வந்தனா்.

இதையறிந்த காஞ்சிபுரம் அருகே தூசி கிராமத்தைச் சோ்ந்தவா்களான சேட்டு (32), சண்முகம்(65), வெங்கடேஷ்(28) ஆகிய மூவரும் அதைத் தோண்டி எடுத்து பருகியதில் 3 பேரும் மயக்கமடைந்து கவலைக்கிடமான நிலையில் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா்.

பெருகிவரும் திறந்த வெளி மதுக்கூடங்கள்: காஞ்சிபுரம் பல்லவன்நகா் தண்ணீா்த் தொட்டி பகுதியில் இரவு நேரங்களிலும், விடுமுறை நாட்களிலும் திருவிழாக் கூட்டம் போல மது அருந்துவோா் கூடுகின்றனராம்.

அரசு மதுக்கடைகளுக்கு அருகில் உள்ள மழைநீா் வரத்துக் கால்வாய்கள் மீது அமா்ந்து கொண்டு மது அருந்துவது சா்வ சாதாரண நிகழ்வாகி இருக்கிறது.

நகரில் பல இடங்களில் மதுப்புட்டிகளும், நெகிழிக் குவளைகளும் குவியல், குவியலாக காட்சியளிக்கின்றன.

இவை தவிர காஞ்சிபுரம் நகரில் பேருந்து நிலையம், மடம் தெரு, மூங்கில் மண்டபம், ரங்கசாமி குளம் ஆகிய பகுதிகளில் காட்டன் சூதாட்டம் வேகமாக பரவி வருகிறது.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் சந்நிதி முன்பாகவும், பேருந்து நிலையத்திலும் திருநங்கைகள் சுற்றுலாப் பயணிகளின் தலையில் கை வைத்து பணம் பறிக்கும் செயலில் ஈடுபடுவதை காவல்துறையினரால் கட்டுப்படுத்த முடியாமல் பெரும் தலைவலியாகவே உருவெடுத்திருக்கிறது.

இது குறித்து காஞ்சிபுரம் பகத்சிங் நெசவாளா் பாசறை அமைப்பாளரான கோ.ரா.ரவி கூறியது:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடா்ந்து பல விழாக்கள் நடந்ததால் காவல்துறையினரின் கவனம் திசை திரும்பியதை சாதகமாக்கிக் கொண்டு கஞ்சா விற்பனையும், காட்டன் சூதாட்டமும், திறந்த வெளியில் மது அருந்துவதும் அதிகமாகி விட்டது.

எனவே புதியதாக பொறுப்பேற்றுள்ள எஸ்.பி.யாவது சட்ட விரோத செயல்களை ஒழிக்க முழு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT