காஞ்சிபுரம்

இடிந்து விழும் நிலையில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம்

30th Aug 2019 04:25 AM

ADVERTISEMENT


உத்தரமேரூர் அருகே ராவத்தநல்லூர்  கிராம  நிர்வாக  அலுவலர்  அலுவலகம்  இடிந்து விழும் நிலையில் இருப்பதால் அதனை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராவத்த நல்லூர் ஊராட்சியில் 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. 
கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு அக்கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதுவரை சீரமைக்கப்படவில்லை. 
இது குறித்து ராவத்தநல்லூரைச் சேர்ந்த கன்னியப்பன் மனைவி சௌதாமணி (61)கூறுகையில், எங்கள் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகக் கட்டடத்தின் உள்பகுதி அடிக்கடி இடிந்து விழுந்து கொண்டே இருக்கிறது. 
மழை நேரமாக இருப்பதால் யாரும் கட்டடத்துக்குள் போக மாட்டோம். கிராம நிர்வாக அலுவலரும் அச்சத்தில் கட்டடத்துக்கு வெளியில் இருந்து கொண்டு தான் மனுக்களைப் பெறுகிறார். 
இது குறித்து நாங்களும் பலமுறை உத்தரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடமும், வட்டாட்சியரிடமும் புகார் தெரிவித்தும் எந்த பலனும் இல்லை. 
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இக்கிராமத்தைச் சேர்ந்த சிலர் அக்கட்டடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மேற்கூரை இடிந்து விழுந்தது. அதிலிருந்து யாரும் அக்கட்டடத்துக்குள் போவதில்லை. அண்மையில் உயர் அதிகாரி ஒருவர் வந்து கட்டடத்தைப் பார்த்து புகைப்படம் எடுத்துச் சென்றார்.
அப்போது விரைவில் புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, கட்டடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT