மதுராந்தகம் அருகே லாரி மீது தனியார் நிறுவனப் பேருந்து மோதிய விபத்தில் ஓட்டுநர் உயிரிழந்தார். பேருந்தில் பயணம் செய்த தொழிலாளர்கள் 9 பேர் காயமடைந்தனர்.
வாலாஜாபாத் அருகேயுள்ள ஒரகடத்தில் தனியார் கார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரியும் ஊழியர்கள் அச்சிறுப்பாக்கம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கின்றனர். இவர்கள் தினமும், நிறுவனத்துக்கு பேருந்துகள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், நிறுவனத்துக்கு 24 தொழிலாளர்கள் ஒரு பேருந்தில் புதன்கிழமை அழைத்துச் செல்லப்பட்டனர்.
கள்ளபிரான்புரம் நெடுஞ்சாலையில் பேருந்து வந்தபோது, தனியார் மதுபானத் தொழிற்சாலைக்கு காலி பாட்டில்களை ஏற்றிச் சென்ற லாரி மீது மோதியது. இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் பருக்கல் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் (49) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், பேருந்தில் பயணம் செய்த 9 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு, செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்து மதுராந்தகம் காவல் ஆய்வாளர் எம்.ஏழுமலை வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.