ரசாயனம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அனுமதியில்லை என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த செய்திக்குறிப்பு: சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. நீர் நிலைகள் (கடல், ஆறு மற்றும் குளங்கள்) நமக்கு குடிநீர் ஆதாரத்தைத் தருகின்றன.
நீர்நிலைகளைப் பாதுகாக்கும் வகையில் வரும் விநாயகர் சதுர்த்தி விழாவினைக் கொண்டாடும்போது விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள நீர் நிலைகளில் மட்டும் கரைத்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
களிமண்ணால் செய்யப்பட்டதும், சுடப்படாததும் மற்றும் எவ்வித ரசாயனக் கலவையற்றதுமான கிழங்கு மாவு அல்லது மரவள்ளிக் கிழங்கிலிருந்து ஜவ்வரிசி தயாரிக்கும் தொழிற்சாலைக் கழிவுகள் போன்ற சுற்றுச்சூழலைப் பாதிக்காத மூலப்பொருள்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.
நீரில் கரையும் தன்மையுடைய மற்றும் தீங்கு விளைவிக்காத இயற்கை வர்ணங்களையுடைய விநாயகர் சிலைகளை உபயோகிக்க வேண்டும். ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்பட மாட்டாது.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகங்களில் அணுகி விளக்கம் பெறலாம்.