காஞ்சிபுரம்

மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

27th Aug 2019 04:19 AM

ADVERTISEMENT


சிறுபான்மையின  மாணவ, மாணவியர் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த செய்திக் குறிப்பு: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள  சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் கல்வி நிலையங்களில் இக்கல்வி ஆண்டில் 1-ஆம் வகுப்பு முதல் 10 -ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு பள்ளிப்படிப்புக்கான கல்வி உதவித்தொகையும், பிளஸ் 1 முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை மற்றும் கலை அறிவியல் கல்லூரி பட்டப்படிப்புகள்,
முதுகலைப் பட்டப்படிப்புகள், பட்டயப்படிப்புகள் பயில்வோருக்கு வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகையும் வழங்கப்படும். 
இதற்கான விண்ணப்பங்கள் இணையம் மூலமாக வரவேற்கப்படுகின்றன. இக்கல்வியாண்டில் தமிழகத்தில் கல்வி உதவித்தொகை திட்டங்களின் படி 1,35,127 மாணவ,மாணவியருக்கு புதிய கல்வி உதவித்தொகை வழங்க மத்திய அரசால் இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்கல்வி உதவித்தொகை அவரவர்களது வங்கிக்கணக்கில் மத்திய அரசால் நேரடியாக வரவு வைக்கப்படும்.
அக். 15 மற்றும் 31: பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகைத் திட்டத்துக்கு தகுதியானவர்கள்  வரும் 15.10.2019 வரையிலும், பள்ளி மேற்படிப்பு மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகைத் திட்டத்துக்கு தகுதியானவர்கள் வரும் 31.10.2019 வரையிலும் http://www.bcmbcmw.tn.gov.in/welfschemes_minorities.htm என்ற இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
இணையத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனுடன் மாணவரது புகைப்படம் மற்றும் தேவையான அனைத்து ஆவணங்களின் நகல்களையும் இணைத்து குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கல்வி நிலையத்தில் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆவண நகல்களை விண்ணப்பத்துடன் இணைத்து கல்வி நிலையத்துக்கு அனுப்பாத மாணவ, மாணவியரின் இணையதள விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது. 
இணைய தளத்தில் வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்களை மிகுந்த கவனத்துடன் பதிவு செய்ய வேண்டும். 
பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களின் விவரங்களை எந்த நிலையிலும் மாற்றவோ திருத்தவோ இயலாது. 
மாணவ, மாணவியரின் ஆதார் எண்களின் விவரம் விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்யும் அலுவலர்களுக்கு இணைய தளத்தால் பகிரப்படமாட்டாது. 
கல்வி நிலையங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்களை விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை சான்றாவணங்களுடன் பரிசீலித்து தகுதி பெற்ற விண்ணப்பங்கள் உடனுக்குடன் சரிபார்க்கப்படவேண்டும்.
புதிதாக விண்ணப்பிக்கும் மாணவ, மாணவியர் இணையதளத்தில் எளிதாக விண்ணப்பிக்கும் வகையில் அனைத்து கல்வி நிலையங்களும் தங்களுடைய குறியீட்டு எண்ணை மாணவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். 
இத்திட்டம் தொடர்பான  கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர்  அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரைத் தொடர்பு கொள்ளலாம். 
சிறுபான்மையின மாணவ, மாணவியர்  இக்கல்வி உதவித் தொகையினை பெற உரிய காலத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயனடைலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT