காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கு கடன் வழங்கும் சிறப்பு முகாம்கள் செவ்வாய்க்கிழமை தொடங்கி செப். 10-இல் நிறைவு பெறவுள்ளதாக ஆட்சியர் பா.பொன்னையா திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம், தனிநபர் கடன் திட்டம், சுய உதவிக் குழுக்களுக்கான சிறுதொழில் கடன் திட்டம், கறவை மாடுகள் கடனுதவி உள்ளிட்ட பல்வேறு கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதற்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.
தேதி வாரியாக நடைபெறும் இடங்கள்: ஆக. 27-இல் ஸ்ரீபெரும்புதூர், ஆக. 28-இல் வாலாஜாபாத், ஆக. 29-இல் உத்தரமேரூர், ஆக.30-இல் தாம்பரம், செப்.3-இல் செங்கல்பட்டு, செப். 4-இல் பல்லாவரம், செப்.5-இல் திருக்கழுக்குன்றம், செப்.6-இல் திருப்போரூர், செப்.9-இல் மதுராந்தகம், செப்.10-இல் செய்யூர் ஆகிய பகுதிகளில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாக இருந்தால் ரூ.1.20 லட்சமாகவும், கிராமப் புறமாக இருந்தால் ரூ.98 ஆயிரத்துக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.
இம்மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையினர் இதில் கலந்து கொண்டு கடன் விண்ணப்பங்களைப் பெற்று அதனைப் பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தேவையான சான்றுகள்: விண்ணப்பத்துடன் மதங்களுக்கான சான்று, ஆதார் அட்டை, வருமானச்சான்று, குடும்ப அட்டை, இருப்பிடச்சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை உள்ளிட்ட ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும்.
கல்விக்கடனுக்கு விண்ணப்பிப்பதாக இருந்தால் பள்ளி மாற்றுச்சான்றிதழ், உண்மைச் சான்றிதழ், கல்விக் கட்டணம் செலுத்திய ரசீதுகள், மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் நகல்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இச்சிறப்பு முகாம்களில் அனைத்து சிறுபான்மையினரும் கடன் உதவி பெற்றுப் பயனடையலாம்.