வெள்ளிக்கிழமை 20 செப்டம்பர் 2019

அத்திவரதர் பெருவிழா: மருத்துவ முகாம்களில் 1.39 லட்சம் பேருக்கு இலவச சிகிச்சை: சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

DIN | Published: 22nd August 2019 04:22 AM
விழாவில் சுகாதாரப்பணிகள் துறையின் துணை இயக்குநர் தி.செந்தில்குமாருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.


அத்திவரதர் பெருவிழாவிற்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மருத்துவ முகாம்களில் 1 லட்சத்து 39 ஆயிரத்து 640 பேருக்கு இலவச சிகிச்சையளிக்கப்பட்டதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் புதன்கிழமை தெரிவித்தார். 
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் பெருவிழா கடந்த ஜூலை முதல் தேதி தொடங்கி, ஆக. 17 வரை நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பாகப் பணியாற்றிய பணியாளர்களுக்கு சுகாதாரப்பணிகள் துறையின் துணை இயக்குநர் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவிற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தலைமை வகித்தார். இதில் சிறப்பாகப் பணியாற்றிய மக்கள் நல்வாழ்வுத்துறையைச் சேர்ந்த 934 பணியாளர்களுக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிப் பேசியது:
அத்திவரதர் பெருவிழா தமிழக அரசுக்கு பெருமை சேர்க்கும் வகையில் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. விழாவில் பல்வேறு அரசுத்துறைகளைச் சேர்ந்த பணியாளர்களும் சிறப்பாகப் பணியாற்றியதால்தான் இந்தப்பெருமை அரசுக்குக் கிடைத்தது.
பணியாற்றிய அனைத்துத்துறையினருக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக மக்கள் நல்வாழ்வுத்துறையின் களப்பணி மிகுந்த பாராட்டுக்குரியது.
தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அடிக்கடி கூட்டங்கள் நடத்தி, விழா எப்படி நடத்தப்பட வேண்டும் என ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கினார்.
கோயிலுக்கு உள்ளேயும், வெளியேயும் 46 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. 
இதில் 191 மருத்துவர்கள்,108 செவிலியர்கள், 58 உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள்,122 சுகாதார ஆய்வாளர்கள், 31 மருந்தாளுநர்கள், 77 ஆம்புலன்ஸ் வாகனங்கள், இதர பிரிவைச் சேர்ந்த பணியாளர்கள் 347 பேர் என மொத்தம் 934 பேர் இரவு, பகல் பாராமல் பணியாற்றினார்கள். இவர்கள் அனைவரையும் ஊக்கப்படுத்தும் விதமாக சிறப்பான பணியைப் பாராட்டி அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
46 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு 1,39,640 பேருக்கு இலவச மருத்துவ சிகிச்சையும், தேவையான மருந்துகளும்  வழங்கப்பட்டன. 586 பேர் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் தலைமை அரசு மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். 
வேலூர் மாவட்டம் பாணாவரம் கிராமத்தைச் சேர்ந்த விஜயா என்ற நிறை மாத  கர்ப்பிணிக்கு கோயிலுக்கு வெளியே  இருந்த மருத்துவ முகாமில் சுகப்பிரசவம் நடந்து ஆண்குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு அத்திவரதா என்றும் பெயர் வைக்கப்பட்டது. 
விழா நடந்த 48 நாள்களிலும் மொத்தம் சுமார் ஒரு கோடி பேர் தரிசனத்துக்கு வந்திருந்தனர். யாருக்கும் எந்த வித நோய்த்தொற்றும் ஏற்படாத வகையில் சுகாதாரத்துறை சிறப்பாகச் செயல்பட்டுள்ளதையும் பாராட்டியே ஆக வேண்டும்.
இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாத வகையில் காஞ்சிபுரம் புற்றுநோய் தடுப்பு மையம் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. 
தமிழகத்தில் ஆயிரம் அரசு மருத்துவமனைகளில் ரத்த சுத்திகரிப்புப் பிரிவு உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார் அவர். 
இந்த விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் என்.சுந்தரமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் டி.ஸ்ரீதர், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குநர் கி.செந்தில்ராஜ், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் தலைவர் வாலாஜாபாத் பா.கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொது சுகாதாரத்துறை இயக்குநர் க.குழந்தைசாமி வரவேற்றார். இதில் மருத்துவத்துறை இயக்குநர் த.செ.சுவாதி ரத்னாவதி, மருத்துவக்கல்வி இயக்குநர் ரா.நாராயணபாபு, முன்னாள் எம்.பி. காஞ்சி பன்னீர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சுகாதாரப்பணிகள்  துறை துணை  இயக்குநர்  தி.செந்தில் குமார்  நன்றி கூறினார். 


 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

ரூ.123.75 கோடியில் பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள் : ஓராண்டுக்குப் பின் மீண்டும் தொடக்கம்
காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சி.ஐ.டி.யு. அமைப்பின் மாநில மாநாடு
மருத்துவர்களைத் தாக்க முயன்ற 3 பேர் கைது
திமுக மாணவர் அணியினர் ஆர்ப்பாட்டம்