காஞ்சிபுரம்

கொட்டும் மழையிலும் அத்திவரதரை தரிசிக்க காத்திருந்த பக்தர்கள்

11th Aug 2019 12:57 AM

ADVERTISEMENT


காஞ்சிபுரத்தில் அத்திவரதர் பெருவிழாவின் 41-ஆவது நாளான சனிக்கிழமை கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமியை தரிசித்தனர்.
காஞ்சிபுரத்தில் சனிக்கிழமை மாலை 20 நிமிடங்கள் மழை பெய்தது. முக்கிய பிரமுகர்கள் வரிசையில் நின்ற பக்தர்கள் பலரும் கொட்டும் மழையிலும் நனைந்து கொண்டே வரிசையில் காத்திருந்தனர். சிலர் குடைகளைப் பிடித்துக் கொண்டே வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தார்கள். 
காஞ்சிபுரத்திலும் அதனைச் சுற்றியுள்ள  வாலாஜாபாத், செவிலிமேடு, ஓரிக்கை பகுதிகளிலும் மிதமான மழை பெய்ததையடுத்து  தாழ்வான  பகுதிகளில்  தண்ணீர்  குளம்  போல  தேங்கி  நின்றது. 
காவல்துறையினர் பணியில் தொய்வு: அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்கள் பலரும் முக்கிய பிரமுகர்கள் செல்லும் வரிசையில் மட்டுமே செல்ல முற்படுவதால் போலீஸாருக்கும், பக்தர்களுக்கும் இடையே அப்பகுதியில் தினசரி வாக்குவாதங்களும், கூச்சல், குழப்பமும் ஏற்பட்டு வந்தன.
இந்த நிலையில் அப்பகுதியில் பணிபுரியும் போலீஸாரும் தனக்கு வேண்டியவர்களை மட்டுமே தரிசனத்துக்கு அனுப்புவதாகவும், மற்றவர்களை வரிசையில் வருமாறு கூறியதாலும் பல்வேறு பிரச்னைகளும் எழுந்தன. இதனால் வருவாய்த்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட பிற துறையினரும் காவல்துறையினர் மீது அதிருப்தி தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியருக்கும் பல்வேறு புகார்களும் வந்தன.
இதனையடுத்து முக்கிய பிரமுகர்கள் செல்லும் வரிசையில் பாதுகாப்பிலிருந்த போலீஸார் அப்பணியிலிருந்து ஒதுங்கி வெவ்வேறு இடங்களில் பாதுகாப்புப் பணியினை செய்து வருகின்றனர். இதேபோல வருவாய்த் துறையினரும் தங்களை முறையாக பணி செய்ய விடாமல் காவல்துறையினர் தடுப்பதாகக் கூறி அவர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதனால் காவல்துறையினர் மத்தியில் பணியில் தொய்வு காணப்படுகிறது. 
வருவாய்த்துறையினருக்கும், காவல்துறையினருக்கும் இடையே மறைமுகமான பனிப்போரும் நடந்து வருகிறது. ஞாயிறு, திங்கள் விடுமுறை நாள்களாகவும், அத்திவரதரை தரிசிக்க  மிகவும் குறைவான நாள்களே இருப்பதாலும் அனைத்துத் துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயலாற்றினால் மட்டுமே பக்தர்களின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றிட முடியும் என்பதும் பக்தர்களின் எதிர்பார்ப்பாகவும் இருந்து வருகிறது.
பயன்படுத்தப்படாத அனுமதிச் சீட்டு ஸ்கேன் கருவிகள்
அத்திவரதர் பெருவிழாவுக்கு வரும் பக்தர்களில் முக்கிய பிரமுகர்களுக்கும், மிக முக்கிய  பிரமுகர்களுக்கும் தனித்தனியாக அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டிருந்தன. இவற்றைக் கொண்டு வருபவர்கள் யாரும் போலியான அனுமதி அட்டைகளை கொண்டு வருகிறார்களா என ஸ்கேன் செய்ய 4 கருவிகள் கொண்டு வரப்பட்டன.
இவை ஸ்கேன் செய்வதற்காக முக்கிய பிரமுகர்கள் செல்லும்  வரிசையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறுவப்பட்டது. இக்கருவிகள் மூலம்  அனுமதிச்சீட்டுகளை ஸ்கேன் செய்யும் போது தாமதமானதால் பலரையும் உடனுக்குடன் சுவாமி தரிசனம் செய்ய அனுப்ப முடியவில்லை. இதனால் இக்கருவிகள் பயன்பாடில்லாமல் முக்கிய பிரமுகர்கள் வரிசையில் ஓரம் கட்டப்பட்டு கிடந்தன.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT