திங்கள்கிழமை 19 ஆகஸ்ட் 2019

அத்திவரதர் பெருவிழா: 1.05 லட்சம் பேருக்கு இலவச சிகிச்சை : சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

DIN | Published: 10th August 2019 01:40 AM


அத்திவரதர் பெருவிழாவில் கடந்த 40 நாள்களில்  மொத்தம் 1 லட்சத்து 5 ஆயிரத்து 650 பேருக்கு இலவசமாக மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டிருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
காஞ்சிபுரத்தில் அத்திவரதர் பெருவிழாவுக்காக அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாம்களை அமைச்சர் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: 
அத்திவரதர் பெருவிழாவில் காவல்துறை, உள்ளாட்சித்துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை உள்பட பல்வேறு துறையினர் இணைந்து பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து வருகின்றனர்.
சுழற்சி முறையில் மருத்துவர்கள், செவிலியர்கள் என மொத்தம் 650 பேர் கோயில் வளாகத்திலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாம்களில் தினமும் காலை 5 மணி முதல் இரவு 12 மணி வரை பணியாற்றி வருகின்றனர்.
தரிசனம் செய்ய வரும் பக்தர்களில் உடல்சோர்வு, மயக்கம் அடைவோருக்கு உடனடியாக ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்கப்படுகிறது. தினசரி இரவு 12 மணிக்குப் பிறகு கோயில் வளாகமும், பிற பகுதிகளும் சுத்தம் செய்யப்படுகிறது. கொசு ஒழிப்பு மருந்துகளும் தெளிக்கப்படுகின்றன.
விழா நடந்து முடிந்துள்ள 40 நாள்களிலும் மொத்தம் 1,05,650 பக்தர்களுக்கு 43 மருத்துவ முகாம்களில் இலவசமாக மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டு,  மருந்து, மாத்திரகளும் வழங்கப்பட்டுள்ளன. 
போதுமான மருத்துவர்களும் தயார் நிலையில் உள்ளனர். மருந்துகள் தேவையான அளவு கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது. இவ்விழா முடிந்தபிறகு, அடுத்த 10 நாள்களுக்கும் மக்கள் நல்வாழ்வுத்துறையினர் காஞ்சிபுரத்திலேயே  இருந்து தங்கி தொற்றுநோய்கள் எதுவும் பரவிவிடாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்று அவர் தெரிவித்தார். முன்னதாக அத்திவரதரை அமைச்சர்  தரிசனம் செய்தார்.

ரயில்வே ஊழியர்கள் இலவச மருத்துவ சேவை
அத்திவரதர் பெருவிழாயொட்டி, காஞ்சிபுரம் கிழக்கு ரயில் நிலையத்தில் ரயில்வே ஊழியர்கள் தினமும் 150-க்கும் மேற்பட்டோருக்கு இலவச சிகிச்சையும், மருந்து, மாத்திரைகளும் வழங்கி வருகின்றனர்.
அத்திவரதர் பெருவிழா கடந்த ஜூலை மாதம் முதல் தேதியிலிருந்து வரும் 17-ஆம் தேதி வரை தொடர்ந்து 48 நாள்களுக்கு நடைபெறுகிறது.
இவ்விழாவில் அத்திவரதரை தரிசனம் செய்ய தமிழகம் முழுவதுமிருந்து தினசரி லட்சக் கணக்கானோர் ரயில் மற்றும் பேருந்துகள் மூலமாக வந்து கொண்டிருக்கின்றனர். ரயிலில் கட்டணம் குறைவு என்பதால் அதிகமான பயணிகள் ரயில் மூலமாக காஞ்சிபுரம் வந்து, அங்கிருந்து வரதராஜப் பெருமாள் கோயிலுக்குச் செல்கின்றனர்.
பின்னர், ஊருக்குத் திரும்பிச் செல்லவும் ரயில் நிலையம் வருகின்றனர். இதனால் காஞ்சிபுரம் கிழக்கு ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம்  எந்த நேரமும் அதிகமாகக் காணப்படுகிறது.
ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகளில் பலரும் காய்ச்சல், வாந்தி, வயிற்றுவலி, உடல்வலி ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு ரயில்வே துறையின் ஆம்புலன்ஸ் சேவை அமைப்பான எஸ்.ஜே.ஏ.பி. மூலம் மருத்துவக் குழுவினர் மற்றும் ஊழியர்கள் இலவசமாக சிகிச்சையும், மருந்து, மாத்திரைகளும் வழங்கி வருகின்றனர்.
இதுகுறித்து மருத்துவக்குழு பெரம்பூர் பிரிவின் தலைவர் கிரிதரன் கூறியது:
அத்திவரதர் பெருவிழாவுக்கு  வரும் பக்தர்களுக்காக ரயில்வே துறையின் ஆம்புலன்ஸ் சேவை அமைப்பின்  மூலம் தினசரி 150-க்கும் மேற்பட்டோருக்கு இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்கி, சிகிச்சையும் அளிக்கப்படுகிறது.
ரயில்வே ஊழியர்களான இவர்கள் முதலுதவிப் பயிற்சியை முடித்தவர்கள். மருத்துவ சேவை தவிர, ரயிலில் பாதுகாப்பான முறையில் பயணம் செய்வது தொடர்பாகவும் பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் என்றார்.

 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

அத்திவரதர் விழா: 2 நாள்கள் ஊதியத்துடன் விடுப்பு, ஊக்கத் தொகைக்கு பரிந்துரை:  ஆட்சியர்
மாமல்லபுரம் ஸ்ரீநவகாளியம்மனுக்கு பாலாபிஷேகம்
அம்மா திட்ட முகாமில் மின்னணு குடும்ப அட்டை வழங்கல்
கிராமங்களில் மருத்துவ முகாம்: பொதுமக்கள் கோரிக்கை
ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி திருவிழா