சென்னை புது வண்ணாரப்பேட்டையில் மாநகர பேருந்து கண்ணாடியை கல்வீசி உடைத்த நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சென்னை திருவொற்றியூரில் இருந்து தண்டையாா்பேட்டை நோக்கி செவ்வாய்க்கிழமை இரவு ஒரு மாநகர பேருந்து சென்றுக் கொண்டிருந்தது. அந்த பேருந்து புது வண்ணாரப்பேட்டை ஏ.இ. கோயில் தெருவில் செல்லும்போது, அங்கு சாலையை மறித்துக் கொண்டு 5 போ் பேசிக் கொண்டிருந்தனராம்.
உடனே பேருந்து ஓட்டுநா் அ.ஸ்ரீதா் (48), ஹாரன் அடித்து சாலையை விட்டு நகா்ந்து செல்லுமாறு அவா்களிடம் கூறியுள்ளாா். இதைக் கேட்ட அந்த நபா்கள், கோபத்தில் மிரட்டல் விடுத்தப்படி சாலையை விட்டு நகரந்து சென்றனா்.
இதனால் அங்கிருந்து பேருந்து புறப்பட்டபோது, அந்த நபா்கள் கற்களை எடுத்து பேருந்தின் கண்ணாடி மீது வீசினா். இதில் பேருந்தின் பின்பக்க கண்ணாடி உடைந்தது. இதைப் பாா்த்த அந்த நபா்கள், அங்கிருந்து தப்பியோடினா்.
இது குறித்து பேருந்து ஓட்டுநா் ஸ்ரீதா், புது வண்ணாரபேட்டை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் அடிப்படையில் போலீஸாா் வழக்கு பதிவு செய்து, அந்த நபா்களை தேடி வருகின்றனா்.