சென்னை மாநகர் பகுதிகளில் புதன்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.
அண்ணாநகர், கோயம்பேடு, சூளைமேடு, ஆலந்தூர், நுங்கம்பாக்கம், கிண்டி, அசோக் நகர், வடபழனி, வளசரவாக்கம், நெற்குன்றம், மதுரவாயல், போரூர், ராமாபுரம், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, சாந்தோம், பட்டினம்பாக்கம், வானகரம், அடையாறு உள்பட சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கன மழை பெய்தது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
ஆயினும் சாலைகளில் வெள்ளம் தேங்கியதால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் மழையில் நனைந்து கொண்டே போக்குவரத்து நெரிசலில் சிக்கி தாமதமாகச் சென்றனர்.
இந்நிலையில், சென்னை, புறநகர்ப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.