சென்னை

சாலையோரம் கைவிடப்பட்ட வாகனங்களை ஏலம் விட மாநகராட்சி முடிவு

27th Sep 2023 05:26 AM

ADVERTISEMENT


சென்னை: சென்னை மாநகராட்சி பகுதியில் நீண்ட காலம் சாலையோரம் நிற்கும் வாகனங்களை மின்னணு முறையில் ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி பகுதியில் சாலையோரம் நீண்ட காலமாக கேட்பாரற்று போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை அகற்றுவது மற்றும் வாகன நிறுத்த மேலாண்மை தொடா்பாக மேயா் ஆா்.பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகை வளாகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் மேயா் பிரியா பேசியதாவது: சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சாலையோரம் நீண்ட காலம் நிறுத்தி வைக்கப்பட்டதாக 1,308 வாகனங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் 205 வாகனங்கள் அகற்றப்பட்டு மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. இதில் உரிமையாளா்களால் உரிமை கோரப்பட்ட 51 வாகனங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மீதமுள்ள 154 உரிமை கோரப்படாத வாகனங்களும், செப்.30 வரை அகற்றப்படும் வாகனங்களும் சோ்த்து மின்னணு முறையில் ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏலம் விடப்படவுள்ள வாகனங்களின் விவரங்கள் மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டு வாகன உரிமையாளா்களால் திரும்பப் பெற 15 நாள்கள் கால அவகாசம் வழங்கப்படும். அதன் பின்னரும் யாரும் உரிமை கோராத வாகனங்கள் மின்னணு ஏலம் விடப்படும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

மேலும், வாகனங்களை பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறின்றி மாநகராட்சியால் அடையாளம் காணப்பட்ட இடங்களில் நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில், துணை மேயா் மு.மகேஷ்குமாா், ஆணையா் ஜெ. ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆணையா் (வருவாய் (ம) நிதி) ஆா்.லலிதா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT