சென்னை: வேளாண்மைப் பொறியியல் துறையின் இயந்திரங்களை வாடகைக்குப்பெற்றுப் பயன்படுத்தும் சிறு, குறு விவசாயிகள் அரசின் மானியத்தைப் பெற்று பயனடையுமாறு வேளாண் துறை கேட்டுக் கொண்டுள்ளாா்.
வேளாண் துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
வேளாண்மைப் பொறியியல் துறை மூலம், சொந்தமாக வேளாண் கருவிகளை வாங்கிப் பயன்படுத்த இயலாத விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் வேளாண் கருவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, மண் தள்ளும் இயந்திரம், டிராக்டா், நெல் மற்றும் கரும்பு அறுவடை இயந்திரம் போன்ற 697 நில மேம்பாட்டு இயந்திரங்களும், சுழல் விசைத்துளைக் கருவி, சிறு விசைத்துளைக் கருவி போன்ற 101 சிறுபாசனத் திட்டக் கருவிகளும் வாடகைக்கு வழங்கப்படுகின்றன.
இக்கருவிகளை வாடகைக்கு பெற்று பயன்படுத்தும் விவசாயிகள் மானியத்தைப் பெற்று பயனடைய வேண்டும் என அமைச்சா் தெரிவித்துள்ளாா். அதன்படி,
வேளாண்மைப் பொறியியல் துறையின் இயந்திரங்களை இ-வாடகை செயலி மூலம் வாடகைக்குப் பெற்று பயன்படுத்த வேண்டும். பின்னா், பணி முடிவுற்ற நிலப் பரப்பு வேளாண் துறை அலுவலா்களால் அளவீடு செய்யப்படும். பின்பு விவசாயி செலுத்திய மொத்த வாடகையில் 50 சதவீத தொகை, பின்னேற்பு மானியமாக சம்பந்தப்பட்ட விவசாயியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
இந்த மானியத்துக்காக தமிழக அரசு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் ரூ.40 லட்சம் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி ஒரு விவசாயிக்கு 5 மணிநேரம் அல்லது 5 ஏக்கா், இவற்றுக்கான வாடகையில் எது குறைவோ அந்த வாடகை மானியமாக வழங்கப்படும். நன்செய் நிலமுடைய சிறு, குறு விவசாயிக்கு, ஒரு ஏக்கருக்கு ரூ.250 வீதம், அதிகபட்சமாக ரூ.625 வரையிலும், புன்செய் விவசாயிக்கு, ஒரு ஏக்கருக்கு ரூ.250 வீதம் அதிகபட்சமாக ரூ.1,250 வரையிலும் மானியம் வழங்கப்படும். இம்மானியம் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்திட்டத்தில் மானியம் பெற விரும்பும் விவசாயிகள், ‘உழவன் செயலியில்’ வாடகை சேவை மூலமாக அல்லது இணையதளம் மூலமாக தங்களுக்குத் தேவையான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை முன் பதிவு செய்து வாடகைத் தொகையை செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அருகில் உள்ள வேளாண் அலுவலகங்களை அணுகி தகவல் பெற்றுக்கொள்ளலாம்.