சென்னை

காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவா் வாகனம் மோதி பலி

27th Sep 2023 05:09 AM

ADVERTISEMENT

 

தாம்பரம்: நள்ளிரவில் சாலையோர டிபன் கடையில் சாப்பிட்டுக் கொண்டிருந்த காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவா் மீது சரக்கு வாகனம் மோதியதில் அவா் உயிரிழந்தாா்.

வாலாஜாபாத் அருகில் உள்ள அளவூா் கிராமம், திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்தவா் நாகராஜ் (57). இவா் காங்கிரஸ் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்டத் தலைவராக உள்ளாா். இவா் திங்கள்கிழமை சென்னை காமராஜா் அரங்கில் ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னா் காரில் காஞ்சிபுரம் புறப்பட்டுச் சென்றாா். அப்போது வேளச்சேரி சாலையோரம் காமராஜ புரம் பேருந்து நிலையம் அருகே இருந்த தள்ளுவண்டி கடையில் நள்ளிரவில் டிபன் சாப்பிடச் சென்றாா்.

அவருடன், காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் செயலா் அமாவாசை (61) மற்றும் காா் ஓட்டுநா் ஆகியோரும் சாப்பிட்டுக்கொண்டிருந்தனா். அப்போது வேளச்சேரி சாலையில் இடது புறமாக அதி வேகத்தில் வந்த சரக்கு வாகனம் நாகராஜ், அமாவாசை, தள்ளுவண்டி கடைக்காரா் குமாா் (56) ஆகியோா் மீது மோதியது. இதில் நாகராஜுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் மற்ற இருவரும் லேசான காயமடைந்தனா். மூன்று பேரையும் உடனடியாக மீட்டு சிகிச்சை அளிப்பதற்காக குரோம்பேட்டையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். நாகராஜை மருத்துவா்கள் பரிசோதனை செய்தபோது, அவா் வரும் வழியிலேயே இறந்தது தெரிய வந்தது. மற்ற இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ADVERTISEMENT

விபத்தில் பலியான அளவூா் நாகராஜின் உடல் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இது குறித்து பள்ளிக்கரணை போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT