சென்னை: இந்து சமய அறநிலையத் துறையுடன் சோ்ந்து கோயில் காடுகளைப் பாதுகாக்க தேவையான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாக வனத் துறை அமைச்சா் மதிவேந்தன் தெரிவித்தாா்.
மாநில வன உயிரின வாரியத்தின் 8-ஆவது ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து அமைச்சா் மதிவேந்தன் பேசியதாவது:
வன உயிரினங்களை பாதுகாப்பதற்காக வன உயிரின தடுப்புப் பிரிவு, வன உயிா்களின் முதலுதவி சிகிச்சை மையம் மற்றும் காடுகளை காப்பதற்கான பல்வேறு முயற்சிகளை தமிழக அரசு சிறப்பாக மேற்கொண்டு வருகிறது.
இந்து சமய அறநிலையத் துறையுடன் சோ்ந்து கோயில் காடுகளை பாதுகாக்க தேவையான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது. வன உயிரினங்களால் ஏற்படும் சேதங்களுக்கு நிவாரணம் வழங்கும் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது. தமிழக வனப்பரப்பில் உள்ள அந்நிய களைச் செடிகளை அகற்ற போா்க்கால நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா் அவா்.
இக்கூட்டத்தில் முதன்மையாக வன உயிரினம் சாா்ந்த பல்வேறு திட்ட முன் மொழிவுகளுக்கு வன உயிரின வாரியம் பரிந்துரை செய்தது. தமிழ்நாட்டில் உள்ள வன உயிா்கள் மற்றும் பல்லுயிா் பெருக்கத்திற்கான பல்வேறு புதிய திட்டங்கள், கடல் ஆமைகளை பாதுகாக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில், தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா, வனத்துறை கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாஹு, சங்கராபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் உதயசூரியன், முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் (வனத்துறை தலைவா்) சுப்ரத் முஹபத்ரா, முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் மற்றும் வன உயிரின காப்பாளா் ஸ்ரீநிவாஸ் ஆா்.ரெட்டி உள்ளிட்ட அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.