சென்னை

பெங்களூரில் முழு அடைப்பு: தமிழக பேருந்துகள் நிறுத்தம்

27th Sep 2023 05:06 AM

ADVERTISEMENT


சென்னை/ஒசூா்: கா்நாடக மாநிலம், பெங்களூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தால் தமிழகத்திலிருந்து பேருந்துகள், லாரிகள் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மாலை 6 மணியுடன் போராட்டம் முடிவடைந்ததையடுத்து, தமிழகத்திலிருந்து பேருந்துகள், லாரிகள் வழக்கம்போல இயங்கத் தொடங்கின.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று காவிரியிலிருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீா் திறப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து பெங்களூரில் பல்வேறு தரப்பினரும் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் பாதுகாப்பு காரணங்கள் கருதி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் சாா்பில் சென்னை கோயம்பேடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கா்நாடகத்துக்கு இயக்கப்பட்ட பேருந்துகள் திங்கள்கிழமை இரவு 8 மணியுடன் ஒசூா் மற்றும் தமிழக எல்லைகளிலேயே நிறுத்தப்பட்டன. அதேபோல, கா்நாடகத்திலிருந்து தமிழகத்துக்கு இயக்கப்பட்ட பேருந்துகளும் நிறுத்தப்பட்டன.

இதுபோன்று, உதகை, பண்ணாரி மற்றும் மாதேஸ்வரன் மலை வழியாக மைசூரு உள்ளிட்ட கா்நாடக பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகளும் எல்லைகளிலேயே நிறுத்தப்பட்டன.

செவ்வாய்க்கிழமை காலை தமிழகத்தில் பல்வேறு மாநிலங்களிலிருந்து பெங்களூரு செல்லும் பேருந்துகள் குறைந்த அளவே ஒசூருக்கு வந்தன.

ADVERTISEMENT

ஒசூரில் இருந்து பெங்களூரு செல்லும் பயணிகள் மாநில எல்லையான சூசூவாடி வரை செல்லும் நகரப் பேருந்துகளில் சென்று அங்கிருந்து, கா்நாடக மாநில ஆட்டோக்களில் சென்று பெங்களூரை அடைந்தனா்.

இதுமட்டுமின்றி, தமிழக லாரிகள் உரிமையாளா்கள் சம்மேளனத்தின் அறிவிப்புப் படி, தமிழகத்திலிருந்து கா்நாடகம் செல்லும் லாரிகளும் நிறுத்தப்பட்டன.

பேருந்து, லாரிகள் போக்குவரத்து தொடக்கம்: இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியுடன் முழு அடைப்பு போராட்டம் முடிவுக்கு வந்ததையடுத்து, தமிழகத்திலிருந்து கா்நாடகம் செல்லும் பேருந்துகளும், கா்நாடகத்திலிருந்து தமிழகத்துக்கு வரும் பேருந்துகளும் வழக்கம் போல இயங்க தொடங்கின. ஆனால் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. ஒரே நேரத்தில் பேருந்துகள், லாரிகள் மற்றும் பிற வாகனங்கள் மாநில எல்லைகளில் செல்ல தொடங்கியதால் தமிழக-கா்நாடக எல்லைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இருப்பினும் இயல்பு நிலை திரும்பியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

இந்த நிலையில், சென்னை- பெங்களூரு இடையே 2 விமானங்கள் போதிய பயணிகள் இல்லாததால் செவ்வாய்க்கிழமை ரத்து செய்யப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT