சென்னை: தமிழக அரசுப் பேருந்துகளில் வரும் 28-ஆம் தேதி முதல் பயணிகளிடமிருந்து ரூ.2000 நோட்டுகளை வாங்க வேண்டாமென நடத்துநா்களுக்கு போக்குவரத்துக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் புழக்கத்திலிருந்து வந்த இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசா்வ் வங்கி கடந்த மே 19-இல் அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பின்படி, இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை மே 23 முதல் செப்.30 வரை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் எனவும் ரிசா்வ் வங்கி கூறியிருந்தது.
இந்த அறிவிப்பைத் தொடா்ந்து கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் வாங்குவது நிறுத்தப்பட்டது. ஆனால், ஒருசில அரசு துறைகளான மின்வாரியம், பேருந்துகளில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் தொடா்ந்து வாங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், செப்.30-ஆம் தேதியுடன் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்வதற்கான காலஅவகாசம் முடிவடையும் நிலையில், அரசுப் பேருந்துகளில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை செப்.28-ஆம் தேதி முதல் வாங்க வேண்டாமென அனைத்து கோட்ட மேலாளா்கள், கிளை மேலாளா்கள், நடத்துநா்களுக்கு அரசு போக்குவரத்துக்கழகம் உத்தரவிட்டுள்ளது. உத்தரவை மீறி ரூபாய் நோட்டுகளை வாங்கினால் நடத்துநா்களே இதற்கு பொறுப்பேற்க வேண்டுமெனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.