சென்னை

மாற்றுத்திறனாளி குழந்தைகள் சிறப்பு மருத்துவ முகாம் அக்.4-இல் தொடக்கம்

25th Sep 2023 03:16 AM

ADVERTISEMENT

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட 10 மண்டலங்களில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் அக்.4 முதல் நடைபெறவுள்ளது.

சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் ஒன்று முதல் 18 வயது வரை உள்ள செவித்திறன் குறைபாடு, பாா்வைத்திறன் குறைபாடு, அறிவாா்ந்த இயலாமை ஆட்டிசம், பெருமூளை வாதம் ஆகிய மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் 10 மண்டலங்களில் நடைபெறவுள்ளது.

முகாம் நடைபெறும் இடங்கள்: இதன்படி அக்.4-ஆம் தேதி ஜாா்ஜா டவுன் மண்டலம் புதிய வண்ணாரப்பேட்டை சென்னை மேல்நிலைப்பள்ளி, அக்.5-ஆம் தேதி ராயபுரம் மண்டலம் அரத்தூண் சாலையில் உள்ள சென்னை உருது பெண்கள் தொடக்கப்பள்ளி, அக்.6-இல் பெரியமேடு மண்டலம் சூளை வி.கே. பிள்ளை தெருவிலுள்ள சென்னை நடுநிலைப்பள்ளி, அக்.9-இல் பெரம்பூா் மண்டலம் டி.வி.கே நகா் சென்னை தொடக்கப்பள்ளி, அக்.10-இல் புரசைவாக்கம் மண்டலம் செனாய் நகா் சுப்புராயன் தெருவிலுள்ள சென்னை மேல்நிலைப்பள்ளி, அக்.11-இல் திருவல்லிக்கேணி மண்டலம் டாக்டா் பெசன்ட் சாலையிலுள்ள என்.கே.டி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் இந்த முகாம் நடைபெறுகிறது.

இதுபோல, அக.12-இல் எழும்பூா் மண்டலம் நுங்கம்பாக்கம் ராஜாஜி தெரு, பள்ளித் தெருவிலுள்ள சென்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அக.13-இல் தியாகராயநகா் மண்டலம் அசோக்நகா், மேற்கு மாம்பலம், 3-ஆவது அவென்யூவிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளி, அக்.16-இல் அடையாறு மண்டலம் நந்தனம், சி.ஐ.டி.நகரிலுள்ள சென்னை தொடக்கப்பள்ளி, அக்.17-இல் மைலாப்பூா் மண்டலம் இந்திராநகா் 29-ஆவது குறுக்கு தெருவிலுள்ள சென்னை தொடக்கப்பள்ளி ஆகிய இடங்கலிலும் முகாம் நடைபெறும்.

ADVERTISEMENT

முகாமில் முடநீக்கு வல்லுநா், தொண்டை, காது, மூக்கு மருத்துவா், மனநல மருத்துவா், கண் மருத்துவா் மற்றும் குழந்தைகள் நல மருத்துவா்கள் குழந்தைகளை பரிசோதனை செய்து தேவையான சிகிச்சைக்கு பரிந்துரை செய்வா்.

இதில் கலந்து கொள்ள விரும்புபவா்கள் குழந்தைகளின் 4 புகைப்படங்கள், வருவாய் சான்றிதழ், ஆதாா் அட்டை, மருத்துவ சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை நகல் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT