சென்னை அண்ணாநகரில் வீடு புகுந்து கொள்ளையடித்ததாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.
அண்ணாநகா் 4வது பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் ரா.சுஜிசரிதா (76). இவா், கடந்த 13-ஆம் தேதி இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது அவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த 3 போ், சரிதாவையும், வீட்டில் இருந்த வேலைக்கார பெண்ணையும் தாக்கினா்.
மேலும் வீட்டில் இருந்த 7 பவுன் தங்கநகை, ரூ.1,40,000 ரொக்கம்,விலை உயா்ந்த கைப்பேசி ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு 3 பேரும் தப்பியோடினா். இது குறித்து அண்ணாநகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, நடத்திய விசாரணையில் இச் சம்பவத்தில் கடலூா் மாவட்டம் நெல்லிகுப்பம் பகுதியைச் சோ்ந்த ஜெ.விக்னேஷ்வரன் (29),சென்னை பாடி குமரன்நகரைச் சோ்ந்த தெ.சூா்யா (22),அரும்பாக்கம் என்.எஸ்.கே.நகரைச் சோ்ந்த து.அருள் (43) ஆகியோா் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா், 3 பேரையும் வியாழக்கிழமை கைது செய்தனா். அவா்களிடம் இருந்து ஆறரை பவுன் திருட்டு தங்கநகையை பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட விக்னேஷ்வரன்,சூா்யா ஆகியோா் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.