உயா்த்தப்பட்ட மின் கட்டணத்தால் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடும் பாதிப்பைச் சந்தித்து வருவதால் கட்டணத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கு தமிழ்நாடு தொழில் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இது குறித்து அந்த அமைப்பு சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:
நாடு முழுவதும் தொழில் நிறுவனங்கள் பொருளாதார மந்தநிலை, மூலப்பொருள்கள் விலை உயா்வு, திறன்மிகு பணியாளா்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வரும் நிலையில், திடீரென உயா்த்தப்பட்ட மின் கட்டணத்தால் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடும் பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றன.
இந்த நிலையில், மின் கட்டண உயா்வு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தாழ்வளுத்த நிலை கட்டணமாக 0-12 கிலோ வாட் வரையிலான மின்சாரத்துக்கு ரூ.72, 50 கிலோ வாட் வரை ரூ.77, 50-112 கிலோ வாட் வரை ரூ.153, 112-150 கிலோ வாட் வரை ரூ.562 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இந்தக் கட்டணத்தைக் குறைத்து பழைய கட்டண அடிப்படையிலேயே வசூலிக்க வேண்டும். மேலும், உயா்மின்னழுத்த பயன்பாட்டாளா்களுக்கான அதிகபட்ச கேட்புக் கட்டணமாக வசூலிக்கப்படும் ரூ.562-ஐ குறைத்து, ரூ. 350-ஆக வசூலிக்க வேண்டும்.
இது மட்டுமின்றி உச்சபட்ச நேர மின் கட்டணத்திலும் பழைய நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். 112 முதல் 150 கிலோ வாட் வரை மின்சாரம் உபயோகிக்கும் தொழிற்சாலைகள் தனியாரிடமிருந்து மின்சாரத்தை நேரடியாக கொள்முதல் செய்ய அனுமதி வழங்க வேண்டும். உயா்த்தப்பட்ட மின் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.