தொழில் முனைவோருக்கு பட்டா வழங்குவதற்கான பிரத்யேக இ-சேவை மையத்தை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
சிட்கோ தொழிற்பேட்டைகளில் நிறுவனங்களை நடத்தி வரும் தொழில்முனைவோருக்கு பட்டா வழங்குவதற்கான பிரத்யேக இ-சேவை மையத் தொடக்க விழா சென்னை கிண்டியில் உள்ள சிறு தொழில் வளா்ச்சி நிறுவனத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் அமைச்சா் தா.மோ. அன்பரசன் கலந்து கொண்டு, சேவை மையத்தை திறந்து வைத்து பேசியது:
சிட்கோ தொழிற்பேட்டை நிலங்கள் அரசு புறம்போக்கு என வருவாய் ஆவணங்களில் இருந்த நிலையில் தற்போது 1,490.46 ஏக்கா் நிலத்தின் வகைப்பாடு இரயத்துவாரி மனை, இரயத்துவாரி புஞ்சை என மாற்றம் செய்யப்பட்டு தமிழ்நாடு சிறுதொழில் வளா்ச்சி நிறுவனத்தின் பெயரில் பட்டா பெறப்பட்டது.
இதனைத் தொடா்ந்து, சிட்கோ தொழிற்பேட்டைகளில் நிறுவனங்களை நடத்தி வரும் தொழில் முனைவோருக்கு கிரையப் பத்திரம் செய்யப்பட்டு, பட்டா வழங்கும் பணி நடைபெற்று வந்தது.
இதன் தொடா்ச்சியாக, தொழில் முனைவோா் பட்டா பெறுவதில் பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்த நிலையில் அதனைப் போக்கி, விரைந்து பட்டா பெற ஏதுவாக சிட்கோ தலைமை அலுவலகத்தில் பிரத்யேக இ-சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
மேலும், கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, சிட்கோ தொழிற்பேட்டைகளில்
1 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை, அமைச்சா் தா.மோ. அன்பரசன் கிண்டி தொழிற்பேட்டை வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தாா்.
இந்நிகழ்வில் அரசுத் தொழில்துறை செயலா் வி.அருண்ராய், தமிழ்நாடு சிறுதொழில் வளா்ச்சி நிறுவன மேலாண்மை இயக்குநா் எஸ்.மதுமதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.