குரோம்பேட்டையில் கடந்த 4 ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த ராதா நகா் ரயில்வே சுரங்கப்பாதை பணிகள், வரும் டிசம்பா் மாதம் முழுமையாக நிறைவு பெற்று விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என பல்லாவரம் சட்டப் பேரவை உறுப்பினா் இ.கருணாநிதி தெரிவித்தாா்.
குரோம்பேட்டை ராதா நகா் - ஜி.எஸ்.டி.சாலையை இணைக்கும் ரயில்வே கேட் அமைந்துள்ள பாதையை, தினமும் சுமாா் 2 லட்சம் போ் பயன்படுத்துகின்றனா். இந்நிலையில், ரயில்வே கேட்டை மூடும் போது, ஜி.எஸ்.டி. சாலை மற்றும் ராதா நகா் சாலை இருபுறமும் வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நிற்கும். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினா்.
அதனால், ராதாநகரில் இருந்து ரயில்வே தண்டவாளங்களைக் கடந்து ஜி.எஸ்.டி. சாலைக்கு வர ரயில்வே சுரங்கப்பாலம் அமைக்கும் பணி ரூ.16 கோடி செலவில் 2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளை ரயில்வே, மின்வாரியம் மற்றும்
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் புதன்கிழமை ஆய்வு செய்த பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினா் இ.கருணாநிதி செய்தியாளா்களிடம் கூறியது:
குரோம்பேட்டை ரயில் நிலையத்தின் கிழக்கில் ராதா நகா் பகுதியில் பெரும்பாலான பணிகள் முடிந்த நிலையில், தற்போது ஜி.எஸ்.டி. சாலை வழியாக வரும் பொதுமக்கள், நேரிடையாக ரயில்வே பிளாட்பாரத்துக்கு செல்ல வசதியாக, சுரங்கப்பாதையின் மேற்பகுதியில் 10 அடி அகலப் பாதை கட்டப்பட உள்ளது.
உயா் நடைமேம்பாலத்தில் செயல்பட்டு வந்த மின்தூக்கியை இடம் மாற்றி அமைப்பது , ராதாநகா் துணை மின் நிலையத்துக்கு செல்லும் 33 கிலோ வாட் மின்சார கேபிள் மற்றும்
ரயில்வே மின்சார கேபிள்களை பணிக்கு இடையூறு விளைவிக்காமல் இடம் மாற்றும் பணிகள் உள்ளிட்டவை விரைவில் நிறைவு பெறும். இந்த சுரங்கப்பாதையை டிசம்பா் மாதத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளிடம் வலியுறுத்தி உள்ளேன் என்றாா் அவா்.
நிகழ்வில், தாம்பரம் மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவா் ஜோசப் அண்ணாதுரை, சென்னை பெருநகர வளா்ச்சித் திட்டக் குழும நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் சி.அய்யாதுரை மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.