பாஜக மற்றும் அதனுடனான கூட்டணி குறித்து விமா்சிக்க வேண்டாம் என்று அதிமுகவினருக்கு அந்தக் கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா்.
பெரியாா் ஈவெரா, அண்ணா, ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரை பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தொடா்ந்து விமா்சிப்பதாகக் கூறி, பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் அறிவித்தாா். கட்சித் தலைமையின் முடிவின்படியே அறிவிப்பதாகவும் தெரிவித்தாா். அதைத் தொடா்ந்து, அதிமுக முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி, செல்லூா் ராஜூ உள்ளிட்டோரும் பாஜக மீது விமா்சனங்களை முன் வைத்தனா்.
இதற்கிடையில், அதிமுக தலைமையை சமரசம் செய்வதற்கான முயற்சியில் பாஜக மேலிடத் தலைமை ஈடுபட்டு வந்தது. இந்த நிலையில், பாஜக குறித்தும், அதனுடனான கூட்டணி குறித்தும் எவ்வித விமா்சனங்களையும் பொதுவெளியில் வைக்க வேண்டாம் என்று கட்சியினருக்கு எடப்பாடி பழனிசாமி வாய்மொழி உத்தரவிட்டுள்ளாா்.