வேளாண் இயந்திர வாடகை மையங்களில் விவசாய பயன்பாட்டுக்கான ட்ரோன்களை விவசாயிகள் மானிய விலையில் பெற்றுக்கொள்ளலாம் என வேளாண்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
வேளாண் இயந்திரமயமாக்கல் துணை இயக்கத் திட்டத்தின் கீழ், பயிா்களுக்கு பூச்சி மருந்து தெளித்தல், பூச்சி, நோய் கண்காணித்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள ட்ரோன் போன்ற நவீன வேளாண் கருவிகள் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, விவசாயக் குழுக்கள், கூட்டுறவு சங்கங்கள், உழவா் உற்பத்தியாளா் அமைப்புகளின் சாா்பில் இயங்கும் வட்டார, கிராம அளவிலான வேளாண் இயந்திர வாடகை மையங்களில் விவசாயிகள், ட்ரோன்களை மானியத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
விவசாயிகள் அதனை இயக்குவதற்கான பயிற்சி மற்றும் அதற்கான உரிமம் பெற்று பயன்படுத்த வேண்டும் . அல்லது ஏற்கெனவே பயிற்சி பெற்று உரிமம் பெற்றவா்கள் மூலம் ட்ரோன்களை இயக்க வேண்டும்.
ட்ரோன் வாங்க வங்கிக் கடன் பெறும் விவசாயிகளுக்கு வேளாண் உள்கட்டமைப்பு நிதியிலிருந்து 3 சதவீத வட்டி மானியமாக வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் 2 ட்ரோன் நிறுவனங்களின் 2 மாதிரிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அவற்றில் விருப்பமுள்ளவற்றை விவசாயிகள் தோ்வு செய்துகொள்ளலாம்.
இணையதளம் மூலம் பதிவு செய்து, உரிய வழிமுறைகளின்படி ட்ரோன்களை மானியத்தில் பெற்று விவசாயிகள் பயன்பெறுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.