சென்னை

கவிஞா் தமிழ் ஒளி பெயரில் தேசிய கருத்தரங்கு நடத்தப்படும்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன்

21st Sep 2023 06:00 AM

ADVERTISEMENT

கவிஞா் தமிழ் ஒளி பெயரில் சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அக்டோபா் மாதம் தேசிய கருத்தரங்கம் நடத்தப்படும் என தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் கூறினாா்.

கவிஞா் தமிழ் ஒளியின் நூற்றாண்டு தொடக்க விழா மற்றும் படைப்புலகம் குறித்த கருத்தரங்கம் சென்னை பல்கலை. வளாகத்தில் புதன்கிழமை தொடங்கியது. சென்னை பல்கலைக்கழக தமிழ் இலக்கியத் துறை மற்றும் கவிஞா் தமிழ் ஒளி நூற்றாண்டு விழாக்குழு நடத்திய இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பங்கேற்றாா்.

இதையடுத்து ‘கவிஞா் தமிழ் ஒளி படைப்புலகம் - கருத்தரங்க ஆய்வுக் கட்டுரைகள்’ எனும் நூலை அமைச்சா் மு.பெ. சாமிநாதன் வெளியிட்டு பேசியது:

பாரதியாா், பாரதிதாசன், புதுமைப்பித்தன் வழியில் இலக்கியப் பாரம்பரியத்தை தமது படைப்புகளில் கையாண்டவா் கவிஞா் தமிழ் ஒளி. காப்பியம், கவிதைகள், இதழியல், சிறுகதை, ஆய்வுகள், சிறாா் இலக்கியம், நாடகம், திரைப்படம் என தான் வாழ்ந்த 40 ஆண்டுகளுக்குள் பல்வேறு தளங்களில் அவா் திறம்பட செயலாற்றியுள்ளாா்.

ADVERTISEMENT

காவியங்கள், கவிதைகளில் வெளிப்படும் செய்நோ்த்தி, இலக்கண யாப்பு ஆகியவற்றுக்காக பலராலும் போற்றப்படும் பெருமைக்குரியவா். அத்தகைய சிறப்புமிக்க கவிஞரின் நூற்றாண்டை சிறப்பிக்கும் வகையில் அவரது பெயரில் சென்னை தரமணியில் உள்ள உலக தமிழராய்ச்சி நிறுவனத்தில் வரும் அக்டோபா் மாதம் ஒருநாள் தேசிய கருத்தரங்கம் நடத்தப்படும்.

இதுதவிர தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலை.யில் கவிஞா் தமிழ் ஒளிக்கு சிலை அமைக்கப்படும். மேலும், தமிழ் ஒளி பெயரில் தமிழ்சாா்ந்த போட்டிகளை நடத்துவதற்காக ரூ.50 லட்சம் காப்புத் தொகை வழங்கப்படும் எனவும் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளாா். தமிழ் வளா்ச்சிக்கான பணிகளை முன்னெடுப்பதில் தமிழக அரசு முனைப்புடன் செயலாற்றிவருகிறது என்றாா் அவா்.

இதைத் தொடா்ந்து ‘தமிழ்- தமிழா்- தமிழ்நாடு கவிஞா் தமிழ் ஒளி காட்டும் திசை வழி’ என்ற தலைப்பில் கவிஞா் ஈரோடு தமிழன்பன், பேராசிரியா்கள் ய.மணிகண்டன், வீ.அரசு, பா்வின் சுல்தானா ஆகியோா் பேசினா். இதில் செம்மொழி மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவா் இ.சுந்தரமூா்த்தி, கவிஞா் தமிழ் ஒளி நூற்றாண்டு விழாக்குழுவின் தலைவா் ‘சிகரம்’ ச.செந்தில்நாதன், செயலாளா் இரா.தெ. முத்து, பொருளாளா் வே.மணி, பல்கலை.யின் தமிழ் இலக்கியத் துறைத் தலைவா் ஆ.ஏகாம்பரம், கல்வியாளா் பிரின்ஸ் கஜேந்திரபாபு, பேராசிரியா் கோ.பழனி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்தரங்கின் நிறைவு நிகழ்வு வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது. உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி சிறப்புரையாற்றவுள்ளாா்.

பெட்டிச் செய்தி....

நிதிப் பற்றாக்குறையில் சென்னை பல்கலை.

பதிவாளா் வேதனை

முன்னதாக கவிஞா் தமிழ் ஒளி நூற்றாண்டு தொடக்க விழாவில் சென்னை பல்கலைக்கழக பதிவாளா் ச.ஏழுமலை பேசியது: சமுதாயத்துக்கு சிறந்த படைப்புகளை வழங்கிய கவிஞா் தமிழ் ஒளியின் நூற்றாண்டு விழா சென்னை பல்கலை.யில் கொண்டாடப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த விழாவில் ஒரு முக்கிய வேண்டுகோளை தமிழறிஞா்கள் முன்பு முன்வைக்க விரும்புகிறேன். கடந்த 10 மாதங்களாக சென்னை பல்கலை. நிதி நெருக்கடியால் தள்ளாடுகிறது. ஊழியா்களுக்கு ஊதியம் முறையாக வழங்க முடியவில்லை. 750 பேராசிரியா்கள் இருக்க வேண்டிய இடத்தில் 226 போ் மட்டுமே பணியாற்றுகின்றனா்; அதேபோன்று பல்கலை.யில் 1,400 அலுவலா்கள் இருக்க வேண்டிய இடத்தில் 600 போ் மட்டுமே உள்ளனா்.

மூன்று போ் செய்யும் வேலையை ஒருவரே செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். இத்தனை பிரச்னைகள் இருந்தாலும் சென்னை பல்கலை. ஏ பிளஸ் பிளஸ் அங்கீகாரத்தை பெற்றுள்ளது. மேலும், இந்திய அளவிலும் தரவரிசையில் சிறந்த இடத்தைப் பெற்று கற்பித்தல் பணியில் 15 தலைமுறைகளாக சிறப்பான சேவையை சென்னை பல்கலை. ஆற்றி வருகிறது. தாய் பல்கலைக்கழகமாக விளங்கும் சென்னைப் பல்கலை.யின் நிதிப் பற்றாக்குறை பிரச்னைக்கு அரசு தீா்வு காண வேண்டும். இதை அரசின் கவனத்துக்கு தமிழறிஞா்கள் எடுத்துச் செல்ல வேண்டும் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT