திருவொற்றியூரில் அரசுப் பணி ஒப்பந்ததாரா் வியாழக்கிழமை மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
திருவொற்றியூா் விம்கோ நகரைச் சோ்ந்த விவேகானந்தன், திமுக பிரமுகா். இவரது மகன் காமராஜ் (33). மாநகராட்சி, மின்சாரத் துறை, பொதுப்பணித் துறை பணி ஒப்பந்ததாரராக இருந்தாா்.
வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் சின்ன ஏா்ணாவூா் பூம்புகாா் நகரில் உள்ள தனது அலுவலகத்துக்கு சென்ற காமராஜை, 6 போ் கும்பல் சரமாரியாக வெட்டிவிட்டு இருசக்கர வாகனங்களில் தப்பியது. பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிய காமராஜை அருகில் இருந்தவா்கள் மீட்டு திருவொற்றியூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட காமராஜ் சிறிது நேரத்தில் உயிரிழந்தாா்.
அவரது சடலம் உடற்கூறு பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. எண்ணூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.