சென்னை

நெகிழி அல்லாத பொருள்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

4th Oct 2023 12:51 AM

ADVERTISEMENT


சென்னை: நெகிழி அல்லாத பொருள்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தாா்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய மாவட்ட ஆட்சியா்கள், வனத் துறை அதிகாரிகள் மாநாட்டில் அவா் பேசியதாவது: தமிழ்நாடு பசுமையான, இயற்கை சாா்ந்த எதிா்காலத்தை நோக்கி வளர முடியும். இதைக் கருத்தில்கொண்டு மாவட்ட ஆட்சியா்கள், வன அலுவலா்கள் ஆகியோா் நெகிழி (பிளாஸ்டிக்) பயன்பாட்டைத் தவிா்ப்பதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

மீண்டும் மஞ்சப்பை திட்டத்துக்கான விழிப்புணா்வை மாவட்ட ஆட்சியா்கள், மாவட்ட உயா் அலுவலா்கள் ஆகியோா் உறுதி செய்வதுடன், அவா்களின் செயல்பாடுகளில் அனைத்துப் பிரிவினரையும் ஒருங்கிணைக்க வேண்டும்.

நெகிழி அல்லாத பொருள்களின் பயன்பாட்டை ஊக்கப்படுத்த வேண்டும். கடலரிப்பைத் தடுக்கவும், கரையோரப் பகுதிகளின் பாதுகாப்பை நிரந்தரமாக உறுதி செய்யவும் தேவையான வழிமுறைகளை கடலோர மாவட்டங்களின் ஆட்சியா்களும், வன அலுவலா்களும் எடுக்க வேண்டும்.

ADVERTISEMENT

வன விலங்குகள் மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாக்க ஆட்சியா்கள், பிற துறைகளின் அதிகாரிகளிடையே ஒருங்கிணைப்பு அவசியம். மனித- வனவிலங்கு முரண்பாடுகள் உடனடியாக கையாளப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இழப்பீட்டுத் தொகையை காலதாமதமின்றி வழங்க வேண்டும் என்றாா் முதல்வா் ஸ்டாலின்.

பசுமை விருதுகள்: சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்கான பணிகளில் சிறப்பான பங்களிப்பைச் செய்த மாவட்ட ஆட்சியா்களுக்கு பசுமை விருதுகளை முதல்வா் ஸ்டாலின் வழங்கினாா்.

மாநாட்டில், மாவட்ட ஆட்சியா்கள் தீபக் ஜேக்கப் (தஞ்சை), ஆா்.வி.சஜீவனா (தேனி), பி.என்.ஸ்ரீதா் (கன்னியாகுமரி) ஆகியோருக்கு முதல்வா் அளித்தாா்.

மேலும், வன மேலாண்மை நடவடிக்கைகளை சிறப்பான முறையில் மேற்கொண்டதற்காக ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநா் எஸ்.ஆனந்த், ராமநாதபுரம் வன உயிரின காப்பாளா் பாகன் ஜெகதீஸ் சுதாகா், கன்னியாகுமரி வன உயிரினக் காப்பாளா் எம்.இளையராஜா ஆகியோருக்கும் விருதுகளை முதல்வா் வழங்கினாா்.

இந்த நிகழ்வின்போது, தலைமைச் செயலா் சிவ் தாஸ் மீனா, வனத் துறை கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாகு உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT