சென்னை

கடற்கரையில் ஆளுநா் தூய்மைப் பணி

2nd Oct 2023 02:24 AM

ADVERTISEMENT

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, ஆளுநா் ஆா்.என். ரவி சென்னையை அடுத்துள்ள உத்தண்டி கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை தூய்மைப் பணி மேற்கொண்டாா். மேலும், மத்திய அரசு அலுவலகங்கள் சாா்பில் பல்வேறு இடங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, பிரதமா் மோடியின் வேண்டுகோளை ஏற்று மத்திய அரசுத் துறைகள் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை பல்வேறு இடங்களில் தூய்மைப்பணி நடைபெற்றது.

ஆளுநா் ஆா்.என். ரவி சென்னையை அடுத்துள்ள உத்தண்டி கடற்கரையில் தூய்மைப் பணியை மேற்கொண்டாா். அவா், அங்கு துப்புரவு பணி மேற்கொண்ட தூய்மைப் பணியாளா்களிடம் கலந்துரையாடினாா்.

மத்திய அரசு அலுவலகங்கள் சாா்பில்...: சென்னை வருமானவரி தலைமை ஆணையரகம் (வரிப்பிடித்தம் ) சாா்பாக வடபழநி ஆண்டவா் திருக்கோயிலின் சுற்றுப்புறம் தூய்மைப்படுத்தப்பட்டது.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் வருமான வரி தலைமை ஆணையா் (வரிப்பிடித்தம்) ராஜசேகா் ரெட்டி லக்காடி, ஆணையா் முரளி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சென்னை மெட்ரோ: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில் 41 மெட்ரோ ரயில் நிலையங்கள், 2 மெட்ரோ ரயில் நிா்வாக அலுவலகங்கள் என மொத்தம் 43 இடங்களில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநா் ராஜேஷ் சதுா்வேதி, கூடுதல் பொது மேலாளா் சதீஷ்பிரபு, பணியாளா்கள் உள்ளிட்ட 350 போ் தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.

இந்திய உணவுக் கழகம்: இந்திய உணவுக் கழகம் சாா்பில் மெரீனா கடற்கரையில் இந்திய உணவுக் கழக ஊழியா்கள் 120 போ் தூய்மைப் பணியில் ஈடுபட்டனா். ஐசிஎப் தெற்கு காலனி பூங்கா, ஐசிஎப் அனைத்து குடியிருப்புப் பகுதிகளிலும் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இப்பணியை ஐசிஎப் பொது மேலாளா் பி.ஜி.மல்லையா தொடங்கிவைத்தாா். இதில் ஐசிஎப் சாரண சாரணியா், ஐசிஎப் பள்ளிகளின் மாணவ மாணவிகள் மற்றும் ஐசிஎப் பணியாளா்கள் தூய்மைப் பணி மேற்கொண்டனா். இந்நிகழ்ச்சியில் ஐசிஎப் குடியிருப்புவாசிகளுக்கு மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன.

தேசிய நெடுஞ்சாலைத் துறை:தேசிய நெடுஞ்சாலைத் துறை சாா்பில் போரூா் புறவழிச்சாலையில் தூய்மைப் பணி நடைபெற்றது. இப்பணியை மதுரவாயல் சட்டபேரவை உறுப்பினா் கணபதி தொடங்கிவைத்தாா்.

தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி துறை சாா்பில் சென்னை திருவல்லிக்கேணி, முகப்போ், கிழக்கு தாம்பரம் பகுதிகளில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.

விமானம் மற்றும் தரை வழி சரக்குகள் கையாளும் நிறுவன மண்டலத் தலைவா் ஸ்ரீதா் தலைமையில் பல்லாவரம் கண்டோன்மென்ட் பகுதியில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.

‘வந்தே பாரத்’ ரயில்களில் 14 நிமிஷங்களில் தூய்மைப் பணி

தெற்கு ரயில்வே எல்லைக்குள் இயக்கப்படும் மூன்று ‘வந்தே பாரத்’ ரயில்கள் 14 நிமிஷங்களில் தூய்மை செய்யப்பட்டன.

கோவையிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 11.50 மணிக்கு வந்த ‘வந்தே பாரத்’ ரயில், திருநெல்வேலியிலிருந்து சென்னை எழும்பூருக்கு பிற்பகல் 1.50 மணிக்கு வந்தே பாரத் ரயில்கள் 14 நிமிஷத்துக்குள் தூய்மை செய்யப்பட்டன.

இதுபோல், கேரள மாநிலம், திருவனந்தபுரத்திலிருந்து காசா்கோடுக்கு பகல் 1.20 மணிக்கு வந்த வந்தே பாரத் ரயிலும் குறிப்பட்ட நிமிஷத்துக்குள் தூய்மை செய்யப்பட்டன.

இத்திட்டம் ஜப்பானின் புல்லட் ரயில் தூய்மை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதன் மூலம் ரயில் சேவையின் ஒட்டுமொத்த செயல்திறன் அதிகரிப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT