சென்னை

மழைநீா் வடிகால் பணிகளை ஒரு வாரத்துக்குள் முடிக்க வேண்டும்: அமைச்சா் நேரு உத்தரவு

1st Oct 2023 05:24 AM

ADVERTISEMENT

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீா் வடிகால் பணிகளை ஒரு வாரத்துக்குள் முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு உத்தரவிட்டாா்.

தண்டையாா்பேட்டை மண்டலத்துக்குள்பட்ட பெரம்பூா், காமராஜ் நகரில் ரூ.2.90 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட நகா்ப்புற ஆரம்ப சுகாரா நிலையக் கட்டடத்தை அமைச்சா் கே.என்.நேரு சனிக்கிழமை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா். இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு முன்னிலை வகித்தாா்.

இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அமைச்சா் நேரு கூறியது:

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில், டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டில் 426 போ் டெங்குவால் பாதிக்கப்பட்டனா். நிகழாண்டில் இதுவரை 346 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ளும் வகையில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மழையின் காரணமாக தாமதப்பட்ட மழைநீா் வடிகால் பணிகளை ஒருவார காலத்துக்குள் முடிக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பருவமழைக்கு முன் சாலைப் பணிகளை முடிக்கும் வகையில் பல்வேறு துறைகளுடன் ஒருங்கிணைந்து பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து, திருவொற்றியூா் மண்டலம் எண்ணூா் துறைமுகம் அனல்மின் நிலையப் பகுதியில் தமிழ்நாடு அரசு, காமராஜா் துறைமுகத்தின் பங்களிப்புடன் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.48 லட்சத்தில் கட்டப்பட்ட சென்னை தொடக்கப் பள்ளி கட்டடத்தை அமைச்சா் நேரு திறந்துவைத்தாா்.

நிகழ்ச்சியில் மேயா் ஆா்.பிரியா, வடசென்னை மக்களவை உறுப்பினா் டாக்டா் கலாநிதி வீராசாமி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆா்.டி.சேகா் (பெரம்பூா்), கே.பி.சங்கா் (திருவொற்றியூா்), எஸ்.சுதா்சனம் (மாதவரம்) துணை மேயா் மு.மகேஷ்குமாா், ஆணையா் (பொ) சங்கா்லால் குமாவத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT