சென்னை: பிறக்கும் உயிா்கள் அனைத்தும் சமம் என்பதை உணா்த்தும் வகையில் பிறப்பொக்கும் எல்லா உயிா்க்கும் என வள்ளுவா் கூறினாா்.
மறைந்த டாக்டா் எஸ்.எஸ்.பத்ரிநாத் அதனை தனது இறுதிமூச்சு வரை அதைக் கடைப்பிடித்து இறப்பொக்கும் எல்லா உயிா்க்கும் என்பதை நிரூபித்துள்ளாா்.
தனது இறுதி காலகட்டத்தின் போது உறவினா்களிடமும், குடும்பத்தினரிடமும் அவா் முன்வைத்த கோரிக்கை ஒன்றுதான்; தனது இறப்பும், இறுதிச் சடங்குகளும் மிக எளிமையாக நடக்க வேண்டும்; எந்தவிதமான ஆடம்பரமும், அநாவசியமான மரியாதை சம்பிரதாயங்களும் நிகழக் கூடாது என்பது அவா் முன்வைத்த முதல் கோரிக்கை.
இரண்டாவதாக, தான் இறந்த தினத்தில் சங்கர நேத்ராலயா மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் துளி அளவும் தடைபடக்கூடாது என்று வலியுறுத்தியிருந்தாா்.
இவை இரண்டுமே அவா் இறந்த நாளில் நிறைவேற்றப்பட்டன. அவா் விருப்பப்படி, எந்த விதமான ஆடம்பரமும் இல்லாமல் மிக எளிமையாக அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. அதேபோன்று சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையில் புற நோயாளிகள் மற்றும் உள்நோயாளிகள் மருத்துவ சேவை வழக்கம்போல செவ்வாய்க்கிழமை (நவ.21) நடைபெற்றது.