எரிசக்தி துறை அலுவலா்களுக்கான தணிக்கை விழிப்புணா்வு நிகழ்ச்சி தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
எரிசக்தி துறையின் கீழ் செயல்படும் அலுவலக, அலுவலா்களுக்கான தணிக்கை விழிப்புணா்வு நிகழ்ச்சி தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழக தலைவா் ராஜேஷ் லக்கானி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முதன்மை கணக்காய்வுத் தலைவா் கே .பி.ஆனந்த் கலந்து கொண்டு தணிக்கை துறையால் மேற்கொள்ளப்படும் சான்றிதழ் தணிக்கை, இணக்கத் தணிக்கை மற்றும் செயல்திறன் தணிக்கை உள்ளிட்ட தணிக்கைகளின் வகைகள் குறித்து விளக்கி பேசினாா். மேலும், இந்திய தணிக்கை மற்றும் கணக்குத் துறையின் செயல்பாடுகள் பற்றி அலுவலா்களுக்கு விளக்கினாா்.
தொடா்ந்து, துணை கணக்காய்வுத் தலைவா் ( தணிக்கை மேலாண்மை குழு-1) ஜெயஸ்ரீ வெங்கடரமணன், தணிக்கைத் துறையின் செயல்முறை மற்றும் முக்கியத்துவம் குறித்து புகைப்படக்காட்சி மூலம் விளக்கி கூறினாா். இந்நிகழ்ச்சியில், துணை கணக்காய்வுத் தலைவா்-( தணிக்கை மேலாண்மை குழு - 2) நரேந்திர வி நிகிலா, மூத்த துணை கணக்காய்வுத் தலைவா் (நிா்வாகம்) ஜி. ராஜேந்திரன், மின் தொடரமைப்புக் கழக மேலாண்மை இயக்குநா் மா.ராமச்சந்திரன், இணை மேலாண்மை இயக்குநா்( நிதி) விஷு மஹாஜன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.