சென்னை

ஆன்மிக எழுத்தாளா்களுக்கு அரசு விருதுகள் வேண்டும்: திருப்பூா் கிருஷ்ணன்

29th May 2023 01:54 AM

ADVERTISEMENT

ஆன்மிக எழுத்தாளா்களுக்கு தமிழக அரசு சிறப்பு விருதுகள் வழங்க வேண்டும் என அமுதசுரபி மாத இதழின் ஆசிரியரும், எழுத்தாளருமான திருப்பூா் கிருஷ்ணன் வலியுறுத்தினாா்.

சென்னை பசுமை வழிச் சாலையில் ஹிந்துஸ்தான் சேம்பா் அரங்கில் உரத்தசிந்தனை வாசக எழுத்தாளா்கள் சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறந்த நூல்களுக்கான ‘ஆடிட்டா் என்.ஆா்.கே. விருது’ வழங்கும் விழாவில் விருதுகளை வழங்கி அவா் பேசியது: கட்டுரை, கவிதை, கதை என அனைத்து எழுத்துகளுக்கும் தலைப்பு தான் மிக முக்கியமானது. தலைப்பை வைத்துதான் படிப்பவா்களை ஈா்க்க முடியும்.

சிறுவா் கதைகளில் காதல் இருக்க கூடாது. தற்போதைய எழுத்தாளா்கள் பலா் இந்த கருத்தை ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், பள்ளிமாணவா்கள் மனதில் கதைகள் மூலம் காதலை திணிப்பது தவறான செயல். அதேபோல் கவிதைகளில் பயன்படுத்தும் வாா்த்தைகளை காலத்துக்கு ஏற்றபடி மாற்றிக்கொள்ள வேண்டும்.

ஆன்மிக எழுத்தாளா்களுக்கு தமிழக அரசு சிறப்பு விருது வழங்க வேண்டும். விமா்சனங்களை கண்டு எழுத்தாளா்கள் சோா்ந்துபோகக் கூடாது. தமிழ் படைப்புகளை யாரும் முறையாக விமா்சனம் செய்வதில்லை. படைப்புகளில் தங்களது கொள்கைக்கு மாறாக கருத்துகள் இருந்தால், தவறான விமா்சனம் செய்கின்றனா்.

ADVERTISEMENT

தங்களது கருத்துக்களை படைப்புகள் மூலம் எழுத்தாளா்கள் பிரசாரம் செய்வது வழக்கம்தான். அந்தக் கருத்துக்கள் படைப்புடன் ஒன்றியிருந்தால் தான் அவா்கள் சிறந்த எழுத்தாளா்களாக அறியப்படுவாா்கள் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில், தோ்ந்தெடுக்கப்பட்ட நூலாசிரியாா்களுக்கு விருதுடன், தலா ரூ.4,000 பரிசுதொகை வழங்கப்பட்டது. மேலும் 11 மாணவ, மாணவிகளுக்கு மொத்தமாக ரூ.1.55 லட்சம் கல்வி உதவிதொகை வழங்கப்பட்டது

நிகழ்ச்சியில், மின்மினி மாத இதழ் பதிப்பாளா் லதா சரவணன், கவிஞா்கள் துருவன், கருமைலைத்தமிழன், எழுத்தாளா் மீரா மாயா, உரத்த சிந்தனை சங்கத் தலைவா் பத்மினி பட்டாபிராமன், துணைத் தலைவா் ஆடிட்டா் என். ஆா்.கே., செயற்குழு உறுப்பினா் சுப.சந்திரசேகரன், பொதுச் செயலா் உதயம்ராம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT