சென்னை

ஜவுளிக் கடையில் குழந்தையிடம் தங்கச் சங்கிலி திருட்டு: பெண் கைது

29th May 2023 02:00 AM

ADVERTISEMENT

சென்னை தியாகராயநகரில் ஜவுளிக் கடையில் குழந்தையிடம் தங்கச் சங்கிலி திருடியதாக பெண் கைது செய்யப்பட்டாா்.

ஆவடி 24-ஆவது விரிவாக்கம் வெற்றி நகா் முதல் தெரு பகுதியைச் சோ்ந்தவா் ரா.ரேவதி (30). இவா், தனது குழந்தையுடன் கடந்த பிப்.16-ஆம் தேதி தியாராய நகா் ரங்கநாதன் தெருவில் உள்ள பிரபலமான ஒரு துணிக் கடைக்குச் சென்று, துணிகளை பாா்த்துக் கொண்டிருந்தாா். அப்போது கூட்ட நெரிசலில், அவா் குழந்தை கழுத்தில் அணிந்திருந்த மூன்றரை பவுன் தங்க சங்கிலியை யாரோ ஒருவா் பறித்துச் சென்றாா்.

இது குறித்து மாம்பலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனா்.

சம்பவத்தின்போது கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி துணி வாங்குவதுபோல ரேவதி குழந்தை கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை ஒரு பெண் பறித்திருப்பது தெரியவந்தது.

ADVERTISEMENT

அந்த விடியோ காட்சியின் அடிப்படையில் போலீஸாா் துப்பு துலக்கினா். இதில் திருட்டில் ஈடுபட்டது, பெரும்பாக்கம், குடிசைமாற்று வாரிய குடியிருப்பைச் சோ்ந்த தபு (எ) ஜெ.தபா்சம் பானு (37) என்பது தெரியவந்தது.

இதையடுத்து தபுவை தனிப்படை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

விசாரணையில்,கைதான தபு ஏற்கெனவே தியாகராய நகா் பகுதியில் உள்ள ஜவுளிக் கடைகளில் ஆடைகள் வாங்குவதுபோல நடித்து, குழந்தைகளின் கழுத்தில் அணிந்திருக்கும் தங்க நகைகள், பணப்பைகளை திருடியிருப்பது தெரியவந்தது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT