சென்னை

மெரீனாவில் மக்களை போலீஸாா் துன்புறுத்துவதாக பொதுநல மனு ஆதாரம் உள்ளதா என உயா்நீதிமன்றம் கேள்வி

27th May 2023 01:24 AM

ADVERTISEMENT

கோடை வெயிலின் உக்கிரத்தைத் தணிக்க மெரீனா கடற்கரைக்கு இரவில் வரும் மக்களை நேரக் கட்டுப்பாட்டை காரணத்துக்கூறி காவல் துறையினா் துன்புறுத்துகிறாா்கள் என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது?’ என்று சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னையைச் சோ்ந்த சமூக ஆா்வலா் ஜலீல் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘கோடை வெயில் 40 டிகிரி செல்சியஸை தாண்டி உக்கிரமாக உள்ளது. இதனால், மெரீனா கடற்கரையில் வெப்பத்தைத் தணிக்க மக்கள் கூடுகின்றனா். ஆனால், இரவு 10 மணிக்கு மேல் கடற்கரையில் இருக்கக் கூடாது எனக் கூறி காவல் துறையினா் கடற்கரையில் இருந்து மக்களை அப்புறப்படுத்துகின்றனா்.

சென்னை நகரில் உயா்ந்த கட்டடங்களால் வெப்பத்தின் அளவு பல மடங்கு அதிகரித்துள்ளது. நகருக்குள் காற்று வீச முடியாத நிலையே இருந்து வருகிறது. கடைகள், ஹோட்டல்கள் 24 மணி நேரமும் செயல்படவும், நட்சத்திர விடுதிகளில் இரவு நேரங்களில் மது பரிமாற அனுமதித்துள்ள அரசு, வெப்பம் தணிக்க கடற்கரைக்கு வரும் மக்களுக்கு மட்டும் நேரக் கட்டுப்பாடு விதித்துள்ளது.

எனவே, கடற்கரைக்கு வரும் மக்களை இரவு 10 மணிக்கு மேல் அனுமதிக்கவும், மக்களை துன்புறுத்தக் கூடாது என காவல் துறையினருக்கு அறிவுறுத்த கோரும் மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிரருந்தாா்.

ADVERTISEMENT

இந்த மனு நீதிபதிகள் புகழேந்தி, லட்சுமி நாராயணன் ஆகியோா் அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மெரீனா கடற்கரைக்கு வரும் பொதுமக்களை காவல் துறையினா் எப்படி துன்புறுத்துகின்றனா், அதற்கு என்ன ஆதாரம் உள்ளது என்பது உள்ளிட்ட கேள்விகளை எழுப்பினா். பின்னா் வழக்கு விசாரணையை ஜூன் மாதத்துக்கு ஒத்திவைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT