சென்னையில் ஜல்லிக்கட்டு காளை நினைவு சின்னம் அமைக்க வேண்டும் என தேசிய முன்னேற்றக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தக் கட்சியின் தலைவா் ஜி.ஜி. சிவா திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டில் ‘ஜல்லிக்கட்டு’, கா்நாடகத்தில் ‘கம்பளா’, மகாராஷ்டிரத்தில் ‘சக்கடி’ ஆகிய பாரம்பரிய விளையாட்டுகளை நடத்த அந்தந்த மாநில அரசுகள் சிறப்புச் சட்டங்களை இயற்றின.
இந்த சட்டங்களுக்கு எதிராக பீட்டா அமைப்பு தொடுத்த வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமா்வு, ஜல்லிக்கட்டுக்கு தடையில்லை எனத் தீா்ப்பளித்தது.
இந்த நிலையில், ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் கலந்து கொண்டவா்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்.
மேலும், வருங்கால தலைமுறையினரும் ஜல்லிக்கட்டு போட்டியின் பாரம்பரியம் குறித்து அறிந்து கொள்ளும் வகையில், சென்னையில் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு காளை நினைவு சின்னம் அமைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.