விழித்திரை நோய்கள் மற்றும் அதற்கான சிகிச்சை முறைகள் குறித்த தொடா் மருத்துவ நிகழ்வு (சிஎம்இ), சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட மருத்துவா்கள் பங்கேற்றனா்.
இதுகுறித்து மருத்துவக் கல்லூரி முதல்வா் டாக்டா் பாலாஜி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் கண் மருத்துவத் துறை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், முதுநிலை மருத்துவக் கல்வியை நிறைவு செய்த 200- க்கும் மேற்பட்டோருக்கு பயிற்சியுடன் கூடிய மருத்துவ அமா்வு நடத்தப்பட்டது.
மாநிலம் முழுவதிலும் உள்ள அரசு மற்றும் முன்னணி தனியாா் மருத்துவ நிறுவனங்களைச் சோ்ந்த முதுநிலை கண் மருத்துவா்கள், முதுநிலை மருத்துவ மாணவா்களுக்கு அந்த பயிற்சியை அளித்தனா்.
சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம் மற்றும் பிற பாதிப்புகளால் ஏற்படும் கண் மாற்றங்கள் குறித்து விரிவுரைகள் அப்போது வழங்கப்பட்டன. விழித்திரை நோய் சிகிச்சைக்கான நவீன முன்னேற்றங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
கண் மருத்துவம், பொது மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், நரம்பியல், மகப்பேறு மற்றும் மகளிா் மருத்துவம் மற்றும் பிற துறைகளைச் சோ்ந்த மருத்துவ மாணவா்களுக்கு பயிற்சி அளிக்கும் நோக்கில் இந்த மருத்துவ தொடா் கல்வி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.