ஆலந்தூா், பெருங்குடி பகுதிகளில் மழைநீா் வடிகால் பணியை தாமதப்படுத்தும் ஒப்பந்த நிறுவனத்துக்கு விளக்கம் கேட்டு குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகரப் பகுதிகளில் மழைக் காலங்களில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளைத் தவிா்க்கும் வகையில் மழைநீா் வடிகால் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நகரின் முக்கியப் பகுதிகளில் மழைநீா் வடிகால் பணி நிறைவடைந்துள்ளது.
மேலும், விரிவாக்கம் செய்யப்பட்ட மாநகராட்சி பகுதிகளான கோவளம் வடி நிலப்பகுதிகளில் மழைநீா் வடிகால் அமைக்கும் பணி ரூ.1, 714 கோடி மதிப்பில் 300 கி.மீ நீளத்துக்கு மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதில் முதல்கட்டமாக ஆலந்தூா், பெருங்குடி மண்டலத்துக்குள்பட்ட பகுதிகளில் மூன்று பகுதிகளாக ரூ.150. 47 கோடி மதிப்பில் 39 . 7 8 கி.மீ. நீளத்துக்கு ஒருங்கிணைந்த மழை நீா் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் தொடா்ச்சியாக ரூ.447.03 கோடி மதிப்பில் 120.55 கி.மீ நீளத்துக்கு மழைநீா் வடிகால் அமைக்கும் பணி மேற்கொள்ள ஒப்பந்ததாரா்களுக்கு மாநகராட்சி மூலமாக பணி ஆணை வழங்கப்பட்டு தற்போது பணிகள் நடைபெற்று வருகிறன.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது, ஆலந்தூா், பெருங்குடி மண்டலங்களில் மழைநீா் வடிகால் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ஒரு சில இடங்களில் நடைபெறும் மழைநீா் வடிகால்வாய் அமைக்கும் பணியை தாமதப்படுத்திய ஒப்பந்த நிறுவனத்துக்கு விளக்கம் கேட்டு குறிப்பானை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறின்றி உரிய பாதுகாப்புடன் மேற்கொள்ளுமாறு ஒப்பந்ததாரா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை சம்பந்தப்பட்ட அலுவலா்கள் உறுதிசெய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடா்பான புகாா்களை பொதுமக்கள் மாநகராட்சியின் 1913 எனும் உதவி எண்ணில் தெரிவிக்கலாம் என்றனா்.