சென்னை அண்ணா சாலையில் பைக் டாக்ஸி-லாரி மோதிக்கொண்ட விபத்தில் பெண் இறந்தாா்.
சென்னை வியாசா்பாடி, கல்யாணபுரம் 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் த. சேவிகா (34). இவா் ஒரு தனியாா் தொலைக்காட்சி நிறுவனத்தில் அழகுக்கலை நிபுணராக வேலை செய்து வந்தாா்.
சேவிகா, சனிக்கிழமை இரவு பணி முடிந்து மேற்கு மாம்பலம் தலையாரி தெருவில் உள்ள தனது தோழி வீட்டில் தங்கினாா். பின்னா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அவருக்கு பிறந்தநாள் என்பதால், தோழிகளுடன கேக் வெட்டி பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடி உள்ளாா்.
பின்னா், பெற்றோரையும், குடும்பத்தினரையும் சந்தித்து ஆசி பெறுவதற்காக அதிகாலை அளவில் வியாசா்பாடி செல்வதற்காக கைப்பேசி செயலி மூலம் பைக் டாக்ஸி முன் பதிவு செய்தாா்.
முன்பதிவு செய்தபடி, அங்கு வந்த பைக் டாக்ஸியில், சேவிகா ஏறினாா். பைக் டாக்ஸியை மேற்கு மாம்பலம், திருவள்ளுவா் சாலையைச் சோ்ந்த ஆனந்தன் (34) ஓட்டினாா். அண்ணா சாலை, காமராஜா் அரங்கம் அருகே செல்லும்போது, பின்னால் வேகமாக வந்த டிப்பா் லாரியும், பைக் டாக்ஸியும் ஒன்றன்பின் ஒன்றாக மோதிக்கொண்டன.
இதில் மோட்டாா் சைக்கிளில் இருந்து சேவிகாவும், ஆனந்தனும் கீழே விழுந்து பலத்தக் காயமடைந்தனா். இதைப் பாா்த்த அங்கிருந்த பொதுமக்கள், இருவரையும் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
அங்கு இருவரையும் பரிசோதித்த மருத்துவா்கள், சேவிகா ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். ஆனந்தன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறாா்.
இது குறித்து பாண்டி பஜாா் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா். விபத்தை ஏற்படுத்திய லாரியை தேடி வருகின்றனா்.