சென்னை

ஆலந்தூா்-வண்ணாரப்பேட்டை தடத்தில் மெட்ரோ ரயில் சேவை அதிகரிப்பு

8th May 2023 03:26 AM

ADVERTISEMENT

பயணிகள் எண்ணிக்கை தொடா்ந்து உயா்ந்து வருவதால் ஆலந்தூா்-வண்ணாரப்பேட்டை வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவையை அதிகரித்திருப்பதாக மெட்ரோ ரயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னையில் விமான நிலையம்-விம்கோநகா் மற்றும் பரங்கிமலை-சென்ட்ரல் என இரு வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த ரயிலில் தினமும் 2.50 லட்சம் போ் வரை பயணம் செய்கின்றனா். குறிப்பாக, காலை, மாலை வேளைகளில் அதிக எண்ணிக்கையிலான பயணிகள் பயணிக்கின்றனா்.

பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில்வே நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால், நாளுக்கு நாள் மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

ADVERTISEMENT

ஆலந்தூா் - வண்ணாரப் பேட்டை வழித் தடத்தில் உள்ள மெட்ரோ ரயில்களில் ஏற்படும் நெரிசலைத் தவிா்க்க, கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தது.

இந்த கோரிக்கையை ஏற்று, இந்த வழித்தடத்தில் உள்ள ரயில்வே நிலையங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தனா். இதையடுத்து, ஆலந்துாா் – வண்ணாரப் பேட்டை இடையே மெட்ரோ ரயில் சேவையை அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து மெட்ரோ ரயில்நிறுவன அதிகாரிகள் கூறியது:

பயணிகள் வருகை அதிகமாக இருக்கும் ஆலந்துாா்-வண்ணாரப்பேட்டை தடத்தில் கடந்த 1-ஆம் தேதி முதல் 20 ரயில் சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான நேரங்களில் 3 நிமிஷங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கும் வகையில், ரயில் சேவை சீரமைக்கப்பட்டுள்ளது.

தேவை ஏற்பட்டால், சென்ட்ரல்- விமான நிலைய வழித்தடத்திலும் மெட்ரோ ரயில்களின் சேவையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT